புதன், 29 ஜூலை, 2020

ஆக்சிஜன் இல்லாவிடில் பூமி


*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?*

அருமையான விழிப்புணர்வு  பதிவு ....

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்...

"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?

 சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...

எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது 

பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..
இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் 

அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசு களில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது..

இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும் னு இருட்டா கருப்பா ஆயிடும்.. 

 மேலும் இப்போது பார்ப்பதை போல அணைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலை யில் கிடைக்கும்.(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும் ... அது வீடோ பாலமோ... எல்லாமே மன்னால் பண்ணி வைத்தது போல பொல பொல வேண உதிர்ந்து போகும். 

காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.

(சும்மாவே நமூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது) 

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும் .. 

எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன் ..

..அதாவது வாயு.

அதுவும் அது எப்படி பட்ட வாயு..? 

பறக்கும் பலூன் ஏன் பறக்குது? 

ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹட்ரோஜன் .

 எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவி யாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. 

புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும்.

 நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.

இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்

 நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல..... 

சூரியனில் உள்ள புறஊதா வை ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது 

அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு

 அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்க படாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைபதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது.

 ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்..

 அழுத்தம் கணிச மான அளவில் குறைந்து விடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் 

அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும் ...

ஹலோ நான் சொல்றது கேக்குதா....ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. 

ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை 

எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால் 

நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும் . (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? 

அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் 

அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட் பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.

சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான் .

அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.

இப்ப சொல்லுங்க...

பூமியில் ஐந்து நொடி.... ஐந்தே ஐந்து நொடி பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது அல்லவா...
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்.....

அப்படி பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும் ..

எனவே

"மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் "!!🙏🏼

திங்கள், 27 ஜூலை, 2020

மனிதம் பற்றிய உளவியல் தகவல்




1. _ஏழாண்டுகளுக்கு மேலாக *நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும்* நீடிக்குமாம்._ 

2. _அடிக்கடி *ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.*_ 

3. எல்லாவற்றுக்கும் _எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்க_ ளாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது _ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்._ 

5. நாளொன்றுக்கு நான்கைந்து _பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்._ 

6. உங்கள் _மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்._ 

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. *மிக _விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்_ தானாம்.* 

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, _அவர்களுக்குள் காதல் இருக்கிறது._ இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. *இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.* 

11. *ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம்* என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் *அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் _(ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்)_* என்று அர்த்தம். 

13. *ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.*  

14. ஒருவர் *அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்.* 

 *15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு _இதய நோய்_ வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.*  

*16. ஒருவர் அடிக்கடி _Mobile phone_ யை பார்த்துக் கொண்டிருப்பது or _Mobile சத்தம் (Notification tones)_ கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார் என்று அர்த்தம்.*

 _*17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் (மணிநேரம்) ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.*_ 

_18. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* (முடியாது/கிடைக்காது/இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* பேசுபவராக இருப்பார்._

சனி, 25 ஜூலை, 2020

நல்ல மனம் வாழும்

கடைக்கு வந்து என் சட்டைப்பையில்  பார்த்தேன். என் செல்போன் காணாமல் போயிருந்தது.

நானே செல்போன் விற்பனை , பழுது நீக்கும் கடை தான் வைத்திருக்கிறேன்.

ஆனால் இந்த செல்போனை தவறவிட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் 25 ஆயிரம் ருபாய் மதிப்பு.எப்படியோ கீழே விழுந்திருக்கிறது.

வேறு ஒரு போனில் இருந்து ,அந்த நம்பருக்கு கால் செய்தேன் முதலில் பதில் இல்லை.  மூன்றாம் முறை  எடுக்கப்பட்டது .

'' ஹலோ '' என்றது ஒரு சிறுவனின் குரல்.

'' இந்த போன் என்னோடது , மிஸ் பண்ணிட்டேன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நானே வந்து வாங்கிக்கறேன். ''

'' கே.ஜெ ஸ்டோர் பக்கத்துல வந்துட்டு இருந்தேன் அங்கிள் , ரோட்ல ஒரு போன் ரிங் ஆயிட்டு இருந்துச்சு. அதான் எடுத்து பேசறேன் ''

''அங்கேயே இருங்க 2 நிமிசத்துல வந்துடறேன் ''

நான் உடனே கிளம்பி  கே.ஜெ ஸ்டோர் அருகில் சென்றேன். சிறுவன் நின்று கொண்டிருந்தேன். கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்திருந்தான். நானும் அணிந்து இருந்தேன்.

'' நான் தான் தம்பி , போன் மிஸ் பண்ணது''

'' இந்தாங்க அங்கிள் ''

'' உன் பேர் என்ன தம்பி ''

'' இளங்கோ ''

'' என்ன க்ளாஸ் படிக்கிற தம்பி ?''

''செவென்த் போகணும் அங்கிள் ''

'' எந்த ஸ்கூல் ''

சொன்னான்.

'' தேங்க்ஸ்பா , போன் எடுத்து ஆஃப் பண்ணி வச்சுக்காம , என்கிட்ட கொடுத்தியே, பெரிய விஷயம் பா ''

'' போன் தொலைச்சவங்க பாவம் தானே,  போன் இல்லமா எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு தான் நினைச்சேன் அங்கிள்.

போனை நானே எடுத்து வச்சிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை ''

நான் அவனிடம் 500 ருபாய் கொடுத்தேன்.

''காசெல்லாம்  வேண்டாம் அங்கிள். ''

''என்னோட சந்தோஷத்துக்காக வாங்கிக்க இளங்கோ. அதுக்கு அப்புறம்  இந்த பணத்துல என்ன வேணா பண்ணிக்கோ ''

அவன் சட்டைப்பையில்    வைத்துவிட்டு கிளம்பி கடைக்கு வந்தேன் . நான் விற்பனையும்,  உதவியாளன் ராகுல்  ரிப்பேரும் கவனிப்போம்.

ஒரு மணிக்கு நானும் , இரண்டு மணிக்கு மேல் அவனும் உணவு இடைவேளைக்கு செல்வது வழக்கம்.

நான் வீட்டிற்கு சென்று இரண்டு மணிக்கு திரும்ப வந்தபோது கடைவாசலில் அந்த சிறுவன் ,இளங்கோ  நின்றிருந்தான்.

ராகுலும் இளங்கோவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

'' இந்த போன்ல டிஸ்பிளே  உடைஞ்சு இருக்கு. மதர் போர்டும் போச்சு , இதை ரிப்பேர் பண்றது வேஸ்ட் . 4000 ருபாய் ஆகும். 4000 ரூபாய்க்கு இதே மாடல் புதுபோன்  கிடைக்கும்''

'' 500 ரூபாய்க்கு இதை ரிப்பேர் பண்ண முடியாதா ?''

'' ம்ம்ஹூம் முடியாது ''

நான் கடைக்கு உள்ளே நுழையும்போது இளங்கோ சோகமாக வெளியேறினான். நான் கூப்பிட்டேன்.

'' என்ன தம்பி , போன் காட்டு ''

கொடுத்தான்.

''ராகுல் , இதுல எல்லா பார்ட்ஸும் மாத்திடு''

'' பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு தம்பி ''

''ஓகே அங்கிள் ''

''இந்த போன் யாரோடது , எப்படி உடைஞ்சிது ''

'' அப்பாவோட போன். ஒரு நாள் தெரியாம கீழ போட்டுட்டாரு  ''

''  உங்க அப்பா என்ன பண்றாரு''

'' சினிமா தியேட்டர்ல வேலை பண்ணாரு. இப்போ தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. இப்போ 3 மாசமா வீட்ல தான்  இருக்காரு. ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண போன் வாங்கிதங்கப்பானு   கேட்டேன்.  காசில்லைனு சொல்லிட்டாரு.  இப்போ தான்  உடைஞ்ச போன் ரிப்பேர் பண்ண பணம் கிடைச்சுது  ''

அவனுடன் மேலும் பேசிக்கொண்டு இருந்தேன். ராகுல் போனை தயார் செய்து முடித்து இருந்தான்.

இளங்கோவிடம் கொடுத்தேன். சந்தோசமாக போனை வாங்கிப்பார்த்தான்.

'' எவ்வளவு ஆச்சு ,அங்கிள்''

'' இப்போ உன்கிட்ட எவ்வளவு இருக்கு''

''500 ருபாய் தான் இருக்கு , அதுவும் நீங்க கொடுத்தது தான் ''

அவனிடம் 500 ருபாய் வாங்கிக்கொண்டுமீதம் 400 ருபாய் கொடுத்தேன் .

''100 ருபாய் எடுத்துக்கிட்டேன்பா  , போயிட்டுவா''

'' அங்கிள் , காலைல நான் உங்க கிட்ட போன் திரும்ப கொடுத்ததால தானே எனக்கு கம்மியா காசு வாங்கி ரிப்பேர் பண்ணீங்க '' என்றான் .

'' அதுமட்டும் இல்லப்பா , உங்க க்ளாஸ்ல பிரபு னு ஒரு பையன் படிக்கறானா ?''

'' ஆமா அங்கிள் ''

'' அவங்க அப்பா தான் நான் . காலைல நீ படிக்கிற ஸ்கூல் பேர் சொன்னேல, நான் சாப்பிட வீட்டுக்கு போனப்ப , பிரபு கிட்ட இளங்கோ பத்தி தெரியுமா னு கேட்டேன்.

தெரியும்பா ,அவன் தான் எப்பவும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட்  மார்க்.  ஆனா ஆன்லைன் க்ளாஸ் ஒரு நாள் கூட அவன் அட்டென்ட் பண்ணவே இல்ல . என்னாச்சுன்னு தெரியலனு சொன்னான் .

நீ ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியாம எவ்வளவு மனசு கஷ்டப்படுவேன்னு தெரியும் இளங்கோ. அதன் உனக்கு கம்மி விலைல ரிப்பேர் பண்ணி கொடுத்தேன். நல்லாப் படிக்கணும்   ''

''ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்'' என்று சொல்லிவிட்டு தன் சட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

அந்த கண்ணீருக்கு பின்னால்  சோகமோ , மகிழ்ச்சியோ , அல்லது இரண்டுமே இருக்கக்கூடும் .

..

[#sharedpost](https://www.facebook.com/hashtag/sharedpost?__eep__=6&__tn__=*NK-y)

படித்ததில் பிடித்தது பக

வியாழன், 23 ஜூலை, 2020

நேர்மை

உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து.

வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்து கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார்.

கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்கு சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச் சொல்லி இருந்தாங்க என்றார்.

ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?”

”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!”

“ரொம்ப கம்மியா யிருக்கே!”

”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!”

” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”

“நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”

“230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!”

”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!”

”சரி சரி உள்ளே வா வீடே ஒரே நியுஸ் பேப்பர் அடைசலா இருக்குண்னு எம்பொண்டாட்டி கத்திக்கிட்டிருந்தா அதான் வர சொல்லியிருக்கா. எடையெல்லாம்  ஒழுங்கா போடுவே இல்லே!”

”கரெக்டா இருக்கும் சார்!”

அந்த மனிதர்  பழைய இரும்புத்தராசுடன் உள்ளே நுழைய ”லட்சுமி! பழைய பேப்பர் எடுக்க வந்திருக்காங்க சீக்கிரம் வா!”

”நான் கொஞ்சம் அடுப்படியிலே வேலையா இருக்கேன். நீங்களே எடுத்துப் போடக்கூடாதா?”

”அப்ப திருப்பி அனுப்பிச்சரவா?”

”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே வந்து எடுத்து போட்டுத் தொலைக்கிறேன்.”

லட்சுமி முணுமுணுத்தபடி கிச்சனில் இருந்து வந்து  ஹாலில் கப்போர்டில் கிடந்த பேப்பர்களை அள்ளி வராந்தாவில் போட்டாள்.

சிதறிக்கிடந்த பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.

”அப்படியே ஒரு கயிரு போட்டு கட்டி வைச்சிருந்தா எடை போட சுலபமா இருந்திருக்கும்யா!”

”ஏன் நீ கயிறு கொண்டு வர மாட்டியா? ”

“இருக்குய்யா ! வண்டியிலே இருக்கு! போய் கொண்டு வரனும்!”

” போய் கொண்டு வா!”

”அந்த பெரியவர் எழுந்தார்.

ரொம்ப தாகமா இருக்குய்யா! குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?”

”கேட்டு ஓரமா ஒரு பைப் இருக்கு பாரு! அதுலே பிடிச்சு குடிச்சுட்டு போய் கயிறு கொண்டுவா!”

பெரியவர்  எழுந்து போய்  அந்த குழாயை திருகினார். வெயிலில் சுடுதண்ணீராய் கையில் விழுந்த நீரை கொஞ்சம் கீழே விட்டு முகம் கழுவி பின்னர் இரண்டு கை பிடித்து அருந்தினார். முகத்தை தோளில் போட்டிருந்த அழுக்குத்துண்டால் துடைத்துக்கொன்டு வெளியே நிறுத்தியிருந்த அந்த மூன்று சக்கர ட்ரை சைக்கிளை  உள்ளே தள்ளிக் கொண்டு வந்தார்.

”கயிரை எடுத்து வான்னு சொன்னா வண்டியையே கொண்டு வந்திட்டியே?” மணிவாசகம் கேட்க

”பேப்பர் நிறைய இருக்குதுய்யா! அதான் எடை போட்டதும் வண்டியிலே எடுத்து போக சவுகரியமா இருக்கும்னு கொண்டு வந்தேன்.”

”சரி பெரியவரே! உங்க பேரு என்ன?”

“முத்து”

“எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க?”

”அது ஆகிப்போச்சுங்க முப்பது வருஷம்!”

”ஒருநாளைக்கு எவ்வளோ கிடைக்கும்.?”

”அது வியாபாரத்தை பொருத்துங்க! வீடுங்கள்லே வேண்டாம்னு எவ்வளோ தூக்கி போடறீங்களோ  அவ்வளவும் எங்களுக்கு சோறூ போடற தெய்வங்கள்!”

பேசிக்கொண்டே இருந்தாலும் பெரியவர் முத்து பேப்பர்களை இரண்டு மூன்று அடுக்குகளாக அடுக்கி கட்டினார். அப்புறம் எடை போட ஆரம்பித்தார். இரண்டு கிலோ எடைக்கல் ஒன்றும் ஒருகிலோ எடைக்கல் ஒன்றையும் சேர்த்து  தராசில் வைத்து மறுபக்கம் பேப்பர்களை வைத்தார்.
தூக்க முடியாமல் தராசை தூக்கி நிறுத்த முள் பேப்பர் இருந்த பக்கம் தாழ்ந்தது. கொஞ்சம்  பேப்பர்களை எடுத்துவிட்டு மீண்டும் நிறுத்தார்.

இதற்குள் வார இதழ்கள் சில நாவல் புத்தகங்கலையும்  என் மகன் படித்து முடித்த கல்லூரி பாடப் புத்தகங்களையும் கொண்டுவந்து போட்டாள் லட்சுமி.

” பேப்பர் வரைக்கு 5 எடை இருக்குய்யா!  அஞ்சு மூணு 15 கிலோ.
”புக் எல்லாம் எட்டு கிலோ  இருக்கு மொத்தம் 23 கிலோ.
பேப்பருக்கு 150 ரூபா. புக்கு கிலோ பன்னெண்டு ரூபா அப்போ  தொண்ணூத்தாறூ  ரூபா. மொத்தம்  எரநூத்து நாப்பத்தாறு ரூபா ” என்றவர் "ஐயா, எதாவது தக்காளி வெங்காயம் வேணுங்களா?”

”உன் அழுகின தக்காளி  யாருக்கு வேணும்? பணத்தை கொடுத்திட்டு பேப்பரை எடுத்துட்டு கிளம்பு.”

”ஐயா,  அம்பது ரூபா கம்மியா இருக்கு! அதுக்கு எதாவது வெங்காயம் தக்காளி வாங்கிக்குங்க!”

”அதானே பாத்தேன். இப்படி எதையாவது சொல்லி அழுகுன தக்காளியை தலையிலே கட்டப் பாக்கறீயா?”

”இல்லே சார். இன்னைக்கு காலையிலே மார்க்கெட்ல எடுத்த புது தக்காளி நீங்களே பொறுக்கி எடுத்துக்கங்க! ரெண்டரை கிலோ ஐம்பது ரூபா”

”மார்க்கெட்ல தக்காளி கிலோ பாஞ்சு ரூபாதான்!”

”அது நேத்து ரேட்டுங்கய்யா!  இன்னிக்கு கிலோ இருபது ரூபாதான்!  உங்களுக்கா வேனும்னா மூணு கிலோ போடறேன்”

”யாருக்கு வேணும் உன் பிச்சை!  ரூபா இருந்தா கொடுத்துட்டு பேப்பரை எடுத்துக்கோ. இல்லேன்னா கிளம்பு. நாங்க வேற ஆளுக்கு போட்டுக்கறோம்!”

” முத போணி ஐயா!  காலையிலே இருந்து வெயில்ல சுத்திட்டு வரேன்!  கடைக்கு இன்னும்  அஞ்சு கிலோ மீட்டர் போகணும் ”

”அதுக்கு”

”இரு நூரு ரூபா இப்ப வாங்கிடுங்க! மிச்சம் ஐம்பது ரூபா நாளக்கி வரும்போது கொடுத்துடறேன்!”

”முழுசா அம்பது ரூபாயை ஆட்டையை போட பாக்கிறீயே?”

”அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்யா! இந்த ஏரியாவுலேதான் முப்பது வருஷமா வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கேன். உங்க துட்டு எனக்கு வேண்டாம்யா! ஏமாத்தி துண்ணா உடம்புலே ஒட்டாதுய்யா! நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுத்துடறேன்யா!”

”அப்ப ஒண்ணு பண்ணு இருநூரு ரூபாவுக்கு எவ்வளோ பேப்பரோ அதை மட்டும்  எடுத்துட்டு போ!  நாளக்கி வரும்போது மீதி பணம் கொடுத்திட்டு மிச்சத்தை எடுத்துப்போ” கறாராக சொன்னார் மணி வாசகம்.

இனி பேசி பிரயோசனம் இல்லை என்று அவர் சொன்னபடி இருநூறு ரூபாயை கொடுத்துவிட்டு பேப்பர் பதினைந்து கிலோவையும்  நாலு கிலோ எடை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் முத்து.

”‘பாவங்க அந்தாளு! இப்படி பச்சாதாபமே இல்லாம விரட்டறீங்க!அந்த அம்பது ரூபாவை அவன் ஏமாத்த மாட்டான். அப்படியே ஏமாத்தினாலும் நாம கொறைஞ்சா போயிருவோம்.”

”ஏன் பேச மாட்டே? ஒவ்வொரு ரூபாவும் நான் உழைச்சு சம்பாதிச்சு  இந்த அளவுக்கு வந்திருக்கேன். யாருகிட்டேயும் நான் ஏமாறத் தயாரா இல்லே!  அவன் நாளக்கி வர மாட்டான் பாரு. இந்த மாதிரி எத்தனை பேரை நான் எடை போட்டு வைச்சிருக்கேன் தெரியுமா?  அந்த ஓட்டை தராசுலே எடை போட்டா எப்படியும் கிலோவுக்கு நூறு கிராம் லாபம் கிடைக்கும். நம்மகிட்டே பத்து ரூபாய்க்கு எடுத்து பன்னென்டு ரூபாவுக்கு விப்பான். ஏமாந்தா எடையிலே இன்னும் கொள்ளையடிப்பான்.

”இப்படி ஒரு ரூபா ரெண்டு ரூபா லாபம் வரலைன்னா அவன் தொழில் செஞ்சு பிரயோசனம் இல்லாம போயிருங்க! அவன் வயித்து பொழைப்ப பாக்க வேணாம்.

”சரிசரி! அவனாலே நமக்குள்ளே எதுக்கு பிரச்சனை? ஆக வேண்டிய வேலையைப்பாரு” என்று மனைவியை அடக்கினார் மணிவாசகம்.

மறுநாள் மணி வாசகம் சொன்னபடி  முத்து வரவில்லை! பொழுது சாய்ந்துவிட்ட்து.

“பார்த்தியா! நான் சொல்லை! அவன் வர மாட்டான்னு!” என்று அமர்த்தலாக சொன்னார்.

”இன்னிக்கு வேற லைன்ல போயிருப்பார். நாளைக்கு வருவார்னு நினைக்கிறேன்.”

”உன் நினைப்பை காயப்போடு.  நமக்கு  நாலு கிலோ பேப்பர் மிச்சம் ஆச்சு! இல்லேன்னா அம்பது ரூபா நஷ்டம் ஆகியிருக்கும்”.

லட்சுமி தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

மறுநாள்  அதிகாலை வேலையிலேயே கேட் கதவு திறக்கவும்  செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த மணி வாசகம்  அப்படியே போட்டுவிட்டு கவனித்தார்.

முத்து உள்ளே நுழையவும் தன் கணிப்பு பொய்யாகி விட்ட்தே என்ற வருத்தமுடன்
”என்னய்யா! அம்பது ரூபா கொண்டு வந்துட்டியா?”

”இல்லீங்கய்யா. நான் வந்தது”

”தான் நினைத்தது சரிதான் என்று உள்ளுக்குள் பெருமிதப்பட்டு கொண்டு  அம்பது ரூபா இல்லாம பேப்பர் போட முடியாது என்றார்.

”சரிங்கய்யா! நான் அம்பது ரூபா கொடுத்திட்டே பேப்பர் எடுத்துக்கறேன் .ஆனா”

”என்னய்யா ஆனா?”

”முந்தா நாள் நீங்க போட்ட புக்ஸ்களை எடுத்துட்டு போனேன். அதுல சில பாட புஸ்தகமும் இருந்தது. அதை கடையிலே போடறதை விட  பழைய புத்தக கடையில கொடுத்தா கொஞ்சம் ரூபா அதிகம் கிடைக்கும்னு தனியா எடுத்து வைச்சேன். பேப்பரை மட்டும் கடையிலே போட்டுட்டு வீட்டுக்கு போய் புக்ஸ்களை புரட்டினேன். அப்ப அதிலே இந்த  காசு இருந்துச்சுய்யா? என்று இரண்டு ஐநூறு ரூபா நோட்டுக்களை நீட்டினார் முத்து.

மணிவாசகம் அதிர்ந்து போனார். ஐம்பது ரூபாயை நம்பாத நான் எங்கே ஆயிரம் ரூபாயை அதுவும் எப்போதோ வைத்து நான் மறந்து போன அந்த ரூபாயை திருப்பி தரும் முத்து எங்கே? மிகவும்  எடையில் மிகவும் தாழ்ந்து போய் விட்டோமே என்று வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

மனம் தெளிவடைந்தவராய்  ”பெரியவரே! புத்தகத்தை எடைக்கு போட்டப்புறம் அது உங்களுக்குத்தான் சொந்தம்.  அதுலே பணம் இருந்தாலும் அது உங்களோடதுதான். நீங்களே வச்சுக்கங்க!”

“நீங்க பெரிய மனசோட  இந்த பணத்தை கொடுத்தாலும் உழைக்காம  இவ்வளோ பணம் கிடைச்சா அப்புறம் அது  என் மனசை மாத்திடும். இதே மாதிரி தினமும் கிடைக்காதான்னு ஏங்க வைக்கும். அப்புறம் என் நேர்மையை கொன்னுடும். வேணாங்கய்யா! இதை நீங்களே வச்சிக்குங்க! ”என்று மணிவாசகம் கையில் ரூபாயை திணித்துவிட்டு  கிள்ம்பினார் முத்து.

”பெரியவரே ஒரு நிமிஷம்!  நேத்து எடை போட்டு வைச்ச புத்தகத்தையாவது எடுத்துட்டு போங்க!”

”அம்பது ரூபா கிடைச்சதும் கண்டிப்பா வரேன்! ”சொல்லிவிட்டு அவர் நடக்க அப்படியே உறைந்து போய் நின்றார் மணிவாசகம்.

பேரன்பைப் பொழிவதே ேபேரானந்தம்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*நேசித்துப் பெறும் தோல்வி..!!*

உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்பு தான் என்பேன்.

உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம். அன்பு குறையும் போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமை தான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது. நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படா விட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.

*சக்தியின் அடையாளம்..*

அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும் போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம். தன்னலம் கருதாமல் பிரதி பலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வு தான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.

பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரை விடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறை சாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?

*ஆள் பார்த்துதான்..*

இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?

இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில் தான் வலிகள் ஏற்படுகின்றன. ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில் தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.

நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதை பதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்து தான் அன்பு வருகிறது!

ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதை பதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.

*அன்பைத் தின்னும் சுயநலம்..*

மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள்.

பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது. பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர் மீதுகூடச் செலுத்த முடியா வண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.

‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித் தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியை விடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.

*அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.*

அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும் போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும் போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும் போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!

பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும். எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவது தான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!

*பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!*



*💗வாழ்க வளமுடன்💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஞாயிறு, 19 ஜூலை, 2020

காதலிக்க நேரமில்லை- தமிழ் சினிமாவின் வரம்

காதலிக்க நேரமில்லை - ஒரு பார்வை
அதே காதல் கதை தான்.. ஆனால்... திரையில்... விளையாடி இருக்கும்... அனுபவம்.. புதுமைதான்.....

சின்னமலை எஸ்டேட் முதலாளி விஸ்வநாதனிடம் வேலை கேட்டு டெண்ட் போட்டு போராடி....பக்கெட்டால் அடி வாங்கி... பின் அவரின் இளைய மகள் ராஜஸ்ரீ மீது காதல் கொண்டு அந்தப் பெண்ணுக்கும் தன் மீது காதல் வர வைக்கும் அசோக்.... ஏழை பணக்காரன் இடைவெளியில் மாட்டிக் கொண்டு விழிக்கும் தன் காதலை சேர்த்து வைக்க...தன் நண்பன் வாசுவிடம் பணக்கார அப்பாவாக வேஷம் அணிந்து வர சொல்கிறான்... வாசுவாசுவும் நண்பனுக்காக வருகிறான்.. வந்து அசோக்கின் அப்பாவைப் போலவே நடிக்கிறான்.... அங்கே அவனுக்கு ஒரு சந்தோஷ ஷாக்.. விஸ்வநாதனின் இரண்டு பெண்களில் மூத்தவள் காஞ்சனாதான் வாசுவின் காதலி... இனி சொல்லவா வேண்டும்.. இருவரும்.. தங்கள் காதலுக்காக நடத்தும் நாடகம்தான் எவர்க்ரீன் ... அட்டகாச "காதலிக்க நேரமில்லை..."

வாசுவாக வரும் முத்துராமன்..அப்பாவாக வேஷம் போட்டதுமே பட்டென்று வேறு ஓர் உடல்மொழிக்குள் நுழைந்து விடுவது நடிப்பின் பல்கலைக் கழக திறவுகள். நிறைய திரைப் பகிர்வுகள் கொண்ட ஒரு நடிகன் அவர்... எந்த வித ஈகோவும் இல்லாமல்.. புது முகத்துக்கு அத்தனை இடம் அளித்திருப்பது.. அவரின் பண்பட்ட நடிப்பை மட்டுமல்ல... தொழில் மீது கொண்ட பக்தியையும் காட்டுகிறது.

எழுத்து போட்டு முடிந்ததுமே முத்துராமன்... காஞ்சனாவின் பாடலோடுதான் படமே ஆரம்பிக்கிறது.. இப்படி....பாடலோடு படத்தை ஆரம்பிக்கும் புதுமை விரும்பிகளில் ஸ்ரீதர்க்கும் இடமுண்டு என்பதில் ஆச்சரியமே இல்லை.. அவர் அப்படித்தான்...கருப்பு வெள்ளையில் ஓர் ஈஸ்ட்மென் இயக்குனர்...

அசோக் ஆக வரும் அறிமுக நாயகன் ரவிச்சந்திரன்... அம்சம்... அழகு... ஆர்வம்... ஒரு வகையான நளினத்தோடே வலம் வருவது புன்னகை...மலேசியாவில் இருந்து புறப்பட்ட கனவு நாயகனை மெல்ல திறந்து விடும்... பருவம் வடியும் முகத்தில்...காதலிக்க நேரமில்லை என்று யாரும் கூற முடியாத கவர்ச்சி....படம் நெடுக... நவ நாகரிக இளைஞனை கண் முன் நடத்துக்கிறார்..

வாசுவின் அப்பாவாக வரும்.. ராகவன்.. அவரின் பாத்திரத்தில் வழியாமல்.. நிறைந்து நிற்கிறார் வழக்கம் போல... சற்று டெசிபல் அதிகம் தான் என்றாலும் அவரின் குரல் வந்தாலே ஒரு வகை நெருக்கத்துக்குள் மனம் புகுந்து விடுவதை மீண்டும் மீண்டும் விரும்புகிறது..... நினைவுகள்.

ராஜஸ்ரீயின் கன்னங்களில்... காதலை... அள்ளலாம் போல. அனுபவம் புதுமை பாடலில் ஒரு காட்சியில் டைட் க்ளோஸ் போயிருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட்டும் சுந்தரமும். வாலிபத்தை தூண்டி விடும்.. மிகச் சிறந்த காதல் நுணுக்கத்தின் மொத்தத் திரையும்... பருவம் சொட்டும் மதி மயக்கமென தீரவே முடியாத பெண்மைக்குள் நம்மையும் இழுத்து விடும்.......

விஸ்வநாதன்- பாலையா....

என்ன சொல்வது.. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் அடிக்கும் சிக்ஸர் ஐ .. பேசாமல் விட்டு விட்டு வேடிக்கைதான் பார்க்க முடியும்.. அசராமல் மனிதர் நொறுக்குகிறார்... உடல் மொழி ஆகட்டும்.. உள்ள மொழி ஆகாட்டும்.. வசனத்தின் நேரமாகட்டும்... அது கொண்ட கூராகட்டும்... மொத்த கதையின் பாதியயைத் தன் தோள் மீது சுமந்து கொண்டு திரியும்.. நடிப்பின் அசாத்தியத்தை மெச்சத்தான் வேண்டும். "..போதும்பா.. கதை இதுக்கு மேல பயங்கரமா இருக்கும் போல. என்று மிரண்டு அலறும் பாதிக் கதையின் இரவுக்குள் நாம்.. கதவுகளையும்..... ஜன்னல்களையும் அடைத்து வைத்துக் கொண்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது...

மீனாவாக வரும் சச்சு.. அழகி... எப்படி காமெடிக்கு போனார் என்று சந்தேகம் வருகிறது..."மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்..."- அள்ளுது.... சச்சுவின் ஆட்டம்... துள்ளல்...நாகேஷ் திருப்பிய பொம்மையாக அசத்தும் சச்சுவின் அளவான தேவையான நடிப்போ... பார்வையோ.. நடனமோ... அது நாடத்தில் இருந்து கற்றவை என்பதை மிக அழகாக காட்டுகிறது... அவருக்கு வைக்கும் பிரேம்....

விமானப் பணிப்பெண்ணாக இருந்த வசுந்தரா தேவியை அழைத்து வந்து காஞ்சனாவாக்கி ...."என்ன பார்வை.. உந்தன் பார்வை ...." என்று ஆட விட்டிருப்பது.. சினிமாவின் சாத்தியம்....... சத்தியம். ஓவியத்தில் இருந்து வெளி வந்த பெண்ணைப் போல.. இருக்கும்... காஞ்சனாவை... காலம் கடந்து சென்று காதலிக்க வைத்து விட... மீண்டும் ஸ்ரீதரே வேண்டும்.....

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா.... உதவிக்கு வரலாமா.. சம்மதம் வருமா.. சந்தேகம்...தானா..." P  B   ஸ்ரீநிவாஸ்- ன் தேன் நழுவும் குரலில்.. ... அட்டகட்டி காட்டுக்குள்.. கொஞ்ச தூரம் வண்டி ஓட்டலாம் போலதான் தோன்றியது...

இருக்கும்....அறிவையெல்லாம் மொத்தமாய் கொட்டி விட்டாரோ என்ற சந்தேகத்தோடு தான் கவியரசைக் காண வேண்டி இருக்கிறது.. விஸ்வநாதன் ராமமூர்த்தி.. இசை தெய்வங்கள்...

"ஓஹோ புரடக்சன்" செல்லப்பா.... என்று ஸ்டைலாக நாகேஷ் கூறும் போது நான் வீட்டுக்குள்ளேயே விசில் அடித்து கத்தினேன்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம்.. ஒரு படி அதன் நிறத்தை மாற்றி அமைத்து இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யம் சேர்த்து விட்டு கையில் பேடோடு பிரேமை கூர்ந்து கவனித்தபடி திரையை விட்டு வெளியேறும் போது.. யப்பப்பா...மகா கலைஞன் மிரட்டுகிறான்....இந்த நடிப்பு பித்தனிடம் மெய் மறந்து கிடக்கத்தான் இன்னும் காத்திருக்கிறது.... காதலிக்க நேரமில்லை கண்கள். சச்சுவோடு காடு மலை எல்லாம சுற்றி கடைசி வரை படம் எடுக்காமல் போவதும்.. பின் அவர் கை பிடிப்பதும்... சிரிப்பின்... சீசாக்கள். திறந்து திறந்து திறந்து கொண்டே இருப்பது... நாகேஷ் எனும்... தவம்..

அதுவரை தன்னிடம் வேலை செய்து வந்த அசோக்.. ஒரு கோடீஸ்வரனின் பிள்ளை என்று தெரிந்த பின்.. அசோகனை "அசோகர்" என்று அழைக்கும் அந்த நடுக்கத்தில் பாலையாவின்... விஸ்வரூபம்... நம்மை அறியாமல் சத்தம் போட்டு சிரிக்க வைத்து கை தட்ட வைக்கும் அதிர்வலைகள் நம்மை சுற்றி தானாகவே உருவாக்கி விடுகிறது...அது காலத்தின் நல்ல சினிமாவின் சாட்சிகள்...

சின்னமலை எஸ்டேட் என்பது வேறு எங்கும் இல்லை.. ஆழியார் தான். சினிமாவுக்காக சின்னமலை ஆக மாற்றி இருக்கிறார்கள். ஆனாலும்.... சின்னமலை எஸ்டேட்டாகவே இன்னமும் ஆழியாரைக் கடக்கையில் தோன்ற வைத்து விட்டதில்தான் ஸ்ரீதரின் ஆக்கம் ஒளிந்திருக்கிறது...

இன்னமும் நாகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் கதையும்..அதற்கு.....பாலையாவின் எதிர்வினைகளும் கண்களின் திரையை விட்டகலவில்லை...அது எல்லா காலத்துக்கும் தன்னை மாற்றிக் கொண்டே நகரும்..... சதுர பொக்கிஷம்.

- கவிஜி

பயத்தை கொல்வோம் - கொரானாவை வெல்வோம்

ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..

ஒரு நாள் இரவு...  மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன

 மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை

உணவு சாப்பிடுவது  குறைந்து
மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,
இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான்

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான்.

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.

அது 'ராஜ மூலிகை' என்பதால்
அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.
 மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் ,துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்

""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!'

துறவி புன்னகை பூத்தார் !

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும்

அந்தச் சிறிது நேரத்தில்
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .

அது மன்னனின் மனதில் அது  குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது

எனவே அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''

மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்

பின் ஒருநாள் பூஜை செய்து
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான்

அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை
நம் மனங்களில் தான் இருக்கின்றன.

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது

'இது நகைச்சுவை அல்ல;

இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும்  விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!

("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட, "அதைப் பற்றி ஏற்படுத்தப்  பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!)

அவரவர்கள் " கொரோனா தொற்றை" -   "கொரோனாவை" அல்ல!
"தொற்றை"-
கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு" - பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக் கிறது!

இத்தனைக்கும் -

இது , "கொல்லும் நோய் அல்ல"! இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!

முதலில் பயத்தை கொல்வோம் கொரோனாவை வெல்வோம்...

வெள்ளி, 17 ஜூலை, 2020

வாழ்க்கை வளம் பெற

அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗ஏமாற்றுக்காறன்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃பொறாமை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

புதன், 15 ஜூலை, 2020

தமிழ்திரை மறந்த டைரக்டா - பாசில்

பாச்சுக்கா....

இப்போது 67 வயதாகும் பாச்சுக்கா என்கிற ஃபாஸில் ஆலப்புழா சனாதன தர்ம கல்லூரியில் படிக்கும் போது மிமிக்ரி செய்பவர். இவரின் கல்லூரித்தோழன் தான் நெடுமுடி வேணு...இருவரும் சேர்ந்து முதன்முதலில் ஒரு மிமிக்ரி குழு உருவாக்கினர். ஃபாஸில் பலகுரலில் பேசுவார்...இருவரும் சினிமாவுக்கு கடுமையானமுயற்சி செய்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது...'ஒரு சுந்தரியுடெ கத' என்கிற அப்படத்தில் இருவரும் நடித்தனர். நடித்தனர் என்றால் டயலாக் கிடையாது. ஒரு பாட்டில் இருவரும் தோன்றுவார்கள்..இந்தப்படத்தை எடுத்தவர் தோப்பில் பாஸி. தயாரிப்பு உதயா ஸ்டுடியோ..அப்படி உதயாவில் வேலைக்கு சேர்ந்தார் ஃபாஸில்.

உதயாவிலிருந்து அப்பச்சன் பிரிந்து நவோதயா என்கிற ஸ்டுடியோவை தொடங்கிய போது ஃபாஸில் அதன் தயாரிப்பு பணிகளில் வேலை செய்தார். நவோதயா ஸ்டுடியோ துவங்கி அப்பச்சன் சிவாஜி கணேசன் நடித்த தச்சோளிஅம்பு உட்பட மூன்று பிரம்மாண்ட படங்களை எடுத்தார். நான்காவதாக 'தீக்கடல்' என்கிற பிரம்மாண்ட படத்தை எடுத்த போது ஃபாஸில் அங்கு பணியிலிருந்தார். சிறிய பட்ஜெட் படமாக ஒரு கதையை சொன்னார் ஃபாஸில். கதை பிடித்துப்போக தயாரிப்பு வேலை தொடங்கப்பட்டது. 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் நாயகனாக அப்போது தமிழில் 'ஒரு தலை ராகம்' படத்தில் நடித்திருந்த சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாயகியாக பூர்ணிமா ஜெயராம் செலக்ட்டாக வில்லனாக மோகன் லால் தேர்வு செய்யப்பட்டார். தேர்வில் ஜட்ஜாக ஜிஜோ(மை டியர் குட்டி சாத்தான்), சிபிமலயில், ஃபாஸில் ஆகியோர் லாலை செலக்ட் செய்ய இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வில்லனானார் மோகன் லால்.

7 லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட மஞ்சில் விரிஞ்ச பூக்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு கோடி வசூலித்தது..புதுமை இயக்குனராக ஃபாஸில் பேசப்பட்டார். அடுத்து உதயா ஸ்டுடியோ அதிபர் இன்றைய நடிகர் குஞ்சாக்கோ போபனின் தந்தை போபன் குஞ்சாக்கோ தயாரிக்க 'தன்யா' என்கிற படத்தை இயக்கினார்.  பின் ப்ரேம் நஸீர், சங்கரை வைத்து 'மறக்கில்ல ஒரிக்கிலும்' என்கிற படத்தை இயக்க அதுவும் சுமாராகவே போனது. இரண்டு படங்களும் சரியில்லாமல் போக அப்பச்சனே மீண்டும் நான்காவது வாய்ப்பு தந்தார்.

"மாமாட்டிக்குட்டி அம்மக்கு"..படம் புத்திர சோகத்தில் தவிக்கும் தம்பதிகள் ஒரு குழந்தையின்றி தவிக்க வெறொரு குழந்தையை தத்தெடுக்க அந்த குழந்தையின் உண்மையான தாய்க்காக தேடி வர, வரும் பாசப்போராட்டத்தின் கதை. கேரளம் முழுவதும் குடும்பம் குடும்பமாக ரசித்து பார்த்த படம். ஷாலினி என்ற மூன்று வயது குழந்தையை அன்று கேரளக்குடும்பம் தன் வீட்டுக்குழந்தையாக பார்த்தது. சாதாரண டைலராக இருந்த ஷாலினியின் அப்பா பாபுவின் வாழ்க்கையை வசந்தமாக்கிய படம். ஷாலினிக்கு மாநில விருதும் கிடைத்தது..அடுத்து அவர் எடுத்த 'ஈட்டில்லம்" சுமார் தான்..

ஈட்டில்லத்தின் தோல்விக்குப்பின் 'நோக்காத்த தூரத்தே கண்ணும் நட்டு' வெளிவந்து புதிய இதிகாசம் படைத்தது. யாருமே இல்லாத ஒரு பாட்டியை தேடி பேத்தி வர இருவரும் அன்பால் இணையும் போது பேத்தி அதிக நாள் உயிர் வாழ மாட்டார் என்பது எப்படி இருக்கும்?..அனைவரையும் அழ வைத்த படம்...பத்மினி பல வருடங்களுக்குப்பிறகு நடித்ததால் படம் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றது...நதியா என்கிற புதிய நாயகியை கேரள மக்கள் விரும்பி ரசிக்கத்தொடங்கினர்.

சூட்டோடு சூடாக 'பூவே பூச்சூடவா' என இப்படத்தை தமிழில் இயக்கி தமிழ் மண்ணில் கால் வைத்தார் ஃபாசில்..செண்டிமெண்ட் செம்மல்களான தமிழர்கள் படத்தைப்பார்த்து உருகி பெரு வெற்றியை அப்படத்துக்கு தந்தனர். ஒரே படத்தில் ஃபாஸில் மிகப்பெரிய டைரக்டர் அந்தஸ்த்துக்கு தமிழகத்தில் வரக்காரணமாயிருந்தது இப்படம்.. பெண்கள் என்றால் பூக்களைப்போல் காட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் நதியாவின் குறும்பும் ஸ்டைலும், ஆண்மைத்தனமான நடிப்பும் புதுமையாக இருந்தன தமிழர்களுக்கு...

அடுத்து கேரளக்கரை திரும்பிய ஃபாஸில் விடலைக்காதலை கையிலெடுத்து உருக்கிய படம் 'எண்ணென்னும் கண்ணேட்டன்ட'...(வருஷம் 16)..படம் புதுமுகங்கள் நடித்ததால் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இப்போதும் ரசிக்கக்கூடிய படம் தான். நாமெல்லாம் லீவில் பாட்டி வீட்டுக்கு போனால் அங்கு நம் முறைப்பெண் வந்தால் ஏற்படும் சிறுகிளுகிளுப்பு காலந்த அன்பை பற்றிய படம். ஒரு அழகான காதலை இப்படம் சொன்னது....

அடுத்தப்படத்திற்கு புதுமுகங்களே வேண்டாம் என நினைத்த ஃபாசில் தன் வெற்றி ஃபார்முலா நதியாவை மம்முட்டியோடு இணைத்து தந்த க்ரைம் த்ரில்லர் படம் தான் 'பூவினு புதிய பூந்தென்னல்'....முந்தானை முடிச்சில்  பாக்யராஜின் குழந்தையாக நடித்த பேபி சுஜிதா பென்னி என்கிற ஆண் குழந்தையாக, ஊமையாக நடித்து அசத்தி இருந்தார். படம் வெற்றி பெற்றதும் இதை தமிழர்களுக்கு கொடுக்க நினைத்த ஃபாசில் சத்யராஜை வைத்து 'பூவிழி வாசலிலே' என எடுத்தார். பூவிழி வாசலிலே படத்தை எடுக்கும் போது நதியா முன்னணி நடிகையாக மாறி இருந்ததால் கார்த்திகாவை தமிழில் அறிமுகப்படுத்தினார் ஃபாஸில்..அவர் ஸ்பெஷலான குழந்தை செண்டிமெண்ட் இங்கும் வேலை செய்தது. ரகுவரன், பாபு ஆண்டனி தன் நடிப்பால் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு போனார்கள்...பூவிழி வாசலிலே எக்கால க்ரைம் த்ரில்லர்..இளையராஜாவின் அசத்தல் BGM இதில்...

பின் எடுத்த 'மணிவத்தூரிலேஆயிரம் சிவராத்ரிகள்' சுமார் தான்...இது அவரை பாதித்தது...தமிழ் பக்கம் திரும்பிய அவர் பார்வை தன் மூன்று படங்களை அடுத்தடுத்து தமிழ் திரைக்கு கொடுக்க வைத்தது. மாமாட்டிக்குட்டியம்மக்கு படம் பொம்முக்குட்டி அம்மாவுக்காகவும், எண்ணென்னும் கண்ணேட்டன்ட படம் வருஷம் பதினாறு படமாகவும், தாம் தயாரித்த சிஷ்யர்கள் சித்திக்-லால் இயக்கிய ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் படம் அரங்கேற்ற வேளையாகவும் எடுத்தார் ஃபாசில்.

இதில் ஃபாசில் தமிழுக்கேற்றவாறு  சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும், செண்டிமெண்ட் பிழிதலும் சேர்த்த வருஷம் பதினாறு பெருவெற்றி பெற்றது...வில்லன், கொலை, பதினாறு வருட சிறை, ஃப்ளாஷ்பேக் இவையெல்லாம் தமிழில் ஃபாஸில்  சேர்த்தது...

இப்போது இரு மாநில இயக்குனரானதால் இரட்டை மொழிப்படமாக அமலா நடிக்க கற்பூர முல்லை-என்ட சூர்ய புத்ரிக்கு ஒரே நாளில் வளர்ந்தது. நாயகி திரைக்கதையானதால் படம் சுமார் தான்..
பின் மம்முட்டியோடு பப்பயுடெ ஸ்வந்தம் அப்பூஸ், மோகன்லாலோடு மணிச்சித்ர தாழு என இருபடங்களும் தமிழில் கிளிப்பேச்சு கேட்கவா படமும் அடுத்தடுத்து வெளி வந்தது..மணிச்சித்ர தாழ் டிரண்ட் செட்டரானது...அது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது..சிறப்பான காமெடி, த்ரில்லர், பாடல் காட்சிகள் இதில் இருந்ததால் படு ஹிட். இந்தப்படப்பிடிப்பின் போது கிளிப்பேச்சு கேட்கவா தமிழ்ப்படத்தில் ஃபாஸில் இருந்ததால் மூன்று யூனிட்டாக பிரித்து படப்பிடிப்பு நடந்தது...சிபிமலயில், ப்ரியதர்ஷன், சித்திக்-லால் என்கிறநான்கு ஜாம்பவான்கள் இந்தப்படத்தை இயக்கித்தந்தனர்....இதில் ஷோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. உடனே வினீத், ஷோபனாவை வைத்து எடுத்த 'மானத்தெ வெள்ளித்தேரு'தோல்வியுற்றது..

பின் அவர் எடுத்த 'அனியத்தி பிறாவு' ஷாலினியை நாயகியாக்கியதோடு தனக்கு படம் தந்த போபனின் மகன் குஞ்சாக்கோவை நாயகனாக்கி பெரு வெற்றி பெற்றது. தமிழிலும் அதை 'காதலுக்கு மரியாதை'யாக தந்து வெற்றிபெற்றார். விஜய்யின் திரை வாழ்க்கையை உறுதிப்படுத்திய படம்...

மம்முட்டியையும், மோகன்லாலையும் ஒரு படத்தில் இணைத்து தந்த 'ஹரிகிருஷ்ணன்ஸ்' வெற்றி பெற தன் மகன் ஃபகத் பாஸிலை களம் இறக்கினார் ஃபாஸில்...'கையெத்தும் தூரத்து'வெற்றியை ஃபகத்துக்கு எட்டாத தூரத்தில் வைத்தது...பின் கண்ணுக்குள் நிலவு தமிழில் தோல்வியடைய மோகன்லாலோடு இணைந்து நயன்தாராவுடன் 'விஸ்மயத்தும்பத்து' படம் சுமார் ரகம்...பின் எடுத்த ஒரு நாள் ஒரு கனவு, கேட் அண்ட் மௌஸ், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், லிவிங் டுகெதர் படங்களின் தோல்வி அவரை ஓய்வுக்கு தள்ளியது...

2011க்கு பிறகு இயக்குனர வேலையை தொடாத ஃபாஸில் தன் முதல் வேலையான நெடுமுடிவேணுவோடு செய்த நடிப்பின் பக்கம் வந்தார். லாலின் 'லூசிஃபர்' படத்தில் நடித்த ஃபாசில் மேலும் நடிக்க தொடங்கினார்..

எனக்குத்தெரிந்து தமிழ்மக்களின் நாடி துடிப்பை அறிந்து வைத்திருந்த இயக்குனர் ஃபாஸில் மட்டுமே..அதனால் தான் கேரளத்தில் சுமார் வெற்றி பெற்ற எண்ணென்னும் கண்ணெட்டன்ட, பூவினு புதிய பூந்தென்னல் படங்கள் தமிழில் பெரு  வெற்றி பெற்றது. இதற்கு அவருக்கு உதவியாக இளையராஜாவும், வசனமெழுதிய இயக்குனர் கோகுல கிருஷ்ணாவும் ஒரு காரணம்...இளையராஜா ஃபாசிலுக்கு அழகழகான பாடல்களை கொடுத்தார். அரங்கேற்றவேளை கேரளத்தில் இரட்டை நாயகன் படத்தில் ஒரு நாயகனை ரேவதியாக்கியது தோல்வியாக அமைந்தது...இடையில் இவர் இயக்கிய கில்லர் என்கிற ஒரே தெலுங்கு படம் நாகார்ஜுன், நக்மா, ஷாம்லி நடிக்க 'ஆதவன்' என இன்ஸ்பிரேஷனில் கதை எடுக்கப்பட்டு வந்தது...மோகன்லால், ஷாலினி, நதியா, பூர்ணிமா பாக்யராஜ், சங்கர், ஃபகத் பாஸில் என நிறைய அறிமுகம் செய்து அவர்கள் வெற்றி பெற்றனர்..குஷ்பு, நக்மாவுக்கு திருப்புமுனை வெற்றிகளை தந்தவர்..இவரது இரண்டாவது மகன் ஃபர்ஹான் பாசிலும் நடிக்க வந்து விட்டார்...

ஃபாஸில் ஸ்பெஷல் என்னவென்றால் பாசம், காதல், ஆக்ஷன், ஃபேமிலி, க்ரைம், காமெடி என எல்லாத்தளங்களையும் தொட்டவர்...அவரது படங்கள் எல்லாமே சிறப்பான அனுபவம்...வாழ்நாளில் நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் நிச்சயம் ஃபாஸில் படங்கள்இருக்கும்....

அது தான் ஃபாஸிலின் ஸ்பெஷல்...

  

கொரானாவை வெல்ல டிப்ஸ் COVED19TIPS

திங்கள், 13 ஜூலை, 2020

தமிழ் சினிமாவிற்கு _ முதல் மரியாதை






சில கதைகளைச் சொல்லும் போது, சில படங்களைப் பற்றி பேசும் போது, கத்தி மேல் நடக்கிற விஷயம் என்பார்கள். அப்படியொரு கத்தி மேல் நடந்து வித்தை காட்டிய இயக்குநர்கள் ஏராளம். அவர்களில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனியிடம் உண்டு. தன் ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் தன் படத்துக்கான ரசிகக் கூட்டத்தின் வட்டத்தை பெரிதுபடுத்திக் கொண்டே போன பாரதிராஜா, அந்தப் படத்தின் மூலமாக, வட்டத்தை ஏக்கர் கணக்கில் பிரமாண்டப்படுத்தினார். அவரின் மண்ணும் மனசுமான இன்னொரு படைப்பாக வந்த அந்தத் திரைப்படம்... ‘முதல் மரியாதை’.

‘இவர் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை’ என்று சிவாஜியைச் சொல்லுவார்கள். உண்மைதான். எத்தனையெத்தனையோ கேரக்டர்களில் வெளுத்து வாங்கியவர். கதைக்கும் கேரக்டருக்கும் உயிர் கொடுத்து, கட்டபொம்மனையும் வ உ சியையும் அப்பர் பெருமானையும் சாக்ரடீஸையும் வீரசிவாஜியையும் அவ்வளவு ஏன்... அந்த சிவபெருமானையே நம் கண் முன்னே காட்சி தரச்செய்த உன்னதக் கலைஞர் சிவாஜி. அப்பேர்ப்பட்ட சிவாஜி எனும் நடிப்பு இமயத்துடன் இயக்குநர் இமயம் கைகோர்த்து, மணக்க மணக்க தந்ததுதான் ‘முதல் மரியாதை’. ‘சிவாஜியுடன் நடிக்கவேண்டும்’ என்று நடிகர் நடிகைகள் ஆசைப்படுவார்கள். ‘சிவாஜியை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும்’ என இயக்குநர்கள் விரும்புவார்கள். யானையை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அதற்கு தீனி போடவேண்டுமே. வெறும் சோளப்பொரி, யானை வயிற்றின் ஒரு மூலைக்குக் கூட தேறாது. தீனி வைத்திருந்தால்தான் யானை சாத்தியம். அப்படியொரு கதைத் தீனியுடன், யானையையே வித்தியாசமாகக் காட்டியதுதான் ‘முதல் மரியாதை’. ‘மேரி’யாக வந்த இளம்குமரிக்கு, ‘குயில்’ என்றொரு கேரக்டர்... குருவி தலையில் பனங்காய்தான். ஆனால் மேரியைக் குயிலாக்கி, அந்தக் குருவியை சிட்டுக்குருவியாக்கி, பனங்காயையே பழுக்கச் செய்த மந்திர வித்தையும் செப்படிவித்தையும் பாரதிராஜாவுக்கு, கைவந்த கலை. அவரின் கைவண்ணத்தில், அவரின் இருகரம் கூப்பிய கரங்களுடனும் கரகரத்த குரலுடனும்... ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோவொரு புல்லாங்குழல், வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக்கொண்டுதான் இருக்கும். அப்படியொரு சோக ராகத்தைத்தான் ஸ்வரம் பிரித்தேன். அதையே உங்கள் பார்வைக்கு படம்பிடித்தேன்’ என்கிற ஆரம்பத்துடன்... வந்து, நம் மனசின் சோகங்களையெல்லாம் தூக்கிப்போட்டார். பிறகு, அந்தக் கிராமத்தின் மென் சோகங்களையெல்லாம் நம் மனசுக்குள் திணித்துத் தைத்தார். அந்த வலிக்கு மருந்தும் தடவினார். பாரதிராஜா தடவிய அந்த மருந்துதான்... ‘முதல் மரியாதை’. ஊர்ப்பெரியவருக்கும் பரிசல்காரிக்கும் நடுவே ஏற்படுகிற நட்பும் பிரியமும் பேரன்பும் மொட்டுவிட்டு, உள்ளங்கைக்குள் காதலென மலர்ந்து பொத்தி வைத்திருப்பதும், அது ஊருக்கும் உறவுக்கும் தெரியவருவதும் அதன் பிறகு என்ன என்பதும்தான் கதை. நம்மூர் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், ‘இருபதுக்கும் ஐம்பதுக்குமான காதல்’தான் ‘முதல் மரியாதை’. ஆனால் வேறொரு பாஷையில் சொன்னதால்தான், அது காவியமானது. அந்த பாஷை... பாரதிராஜா பாஷை. சிவாஜியின் மனைவி வடிவுக்கரசி. ஆனால் பேருக்குத்தான் இந்த உறவு. ஊருக்காகத்தான் இப்படியொரு இணைப்பு. குடும்ப மானம் காக்கத்தான் இந்தப் பிணைப்பு. அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க தன் அப்பனுடன் வருகிறாள் குயில். அன்பு கிடைக்காமல் பஞ்சத்துடன் இருக்கும் ஊர்ப்பெரியவருக்கு வள்ளலென அன்பை அள்ளியள்ளித் தருகிறாள். அதில், மனம் நெகிழ்ந்து, குளிர்ந்து, நெக்குருகிப் போகிறார் அவர். எங்கோ தடுமாறியதன் பலன் வடிவுக்கரசிக்கு மகள். நடிகை அருணா. அவளின் கணவனோ களவாணிப்பயபுள்ள. ஊர்ப்பெரியவர் மலைச்சாமிதான் இமய நடிகர் சிவாஜிகணேசன். அவரின் சகோதரி மகன், விடலைப்பையன். ஊரில், செங்கோடன் என்பவனுக்கு செருப்பு தைப்பதுதான் தொழில். அவளின் அழகு மகள் சிவந்திக்கும் அந்தப் பயலுக்கும் லவ்வு. இது ஒருபக்கம். நமக்கு வழக்கமான, பழக்கமான பாரதிராஜாவின் காதல் எபிசோடுகள்.

வீட்டில் கிடைக்காத அன்பை, வாய்க்காலிலும் வரப்புகளிலும் குருவிகளிடமும் தேடுகிறார்; பாடுகிறார். குயிலிடமும் அப்படித்தான். அங்கே, இவர்களின் சந்திப்புகளை, ஊரில் கயிறுதிரிக்கும் ஜனகராஜ், திரித்துத்திரித்து வடிவுக்கரசியிடம் சொல்கிறார். இத்தனையையும் சொல்லிவிட்ட நிலையில், குயிலைச் சொல்லாவிட்டால் எப்படி? அந்தக் குயில்தான் ராதா. அவரின் நடிப்புலகப் பயணத்தில், இப்படியொரு கனமான பாத்திரத்தை அதுவரை ஏற்கவில்லை அவர். சிவாஜிக்கு ஜோடியாக மட்டுமல்ல... இணையாகவும் நடித்திருப்பார். ராதா பரிச்சயமான, பிடித்த நடிகை. அதேபோல், பிடித்தமான, பிரியமான நடிகை ராதிகா. ஆனாலும் ராதாவுக்கு ராதிகாவின் குரல் கொடுக்க வைத்த துணிச்சலும் தைரியமும் பாரதிராஜாவுக்கே உரித்தானது. மனசின் துக்க ஏக்கங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிற வேளையில் திடுக்கென ஓர் ட்விஸ்ட். ராதா கொலை செய்திருப்பார். கொலையாளியை நமக்குத் தெரியும். அது சத்யராஜ். கதைப்படி ஊருக்குத் தெரியாது, யாரென்று. கூட்டத்தின் நடுவிருந்து எட்டிப் பார்க்கும் வடிவுக்கரசி, பார்த்ததும் பதைத்துப் போவார். அதிர்ந்து போவார். அப்படியே பின்வாங்குவார். போலீஸ் அங்கிருப்பவர்களைத் துரத்தும். பசங்களெல்லாம் தண்ணீரில் கால் வைத்து ஓடுவார்கள். அந்தத் தண்ணீர், வடிவுக்கரசியின் நெற்றியில், நெற்றிப் பொட்டில் வந்து விழும். பொட்டு கரையும். வடிவுக்கரசியின் காதலன் சத்யராஜ் என்பதையும் வடிவுக்கரசியின் மகளுக்கு அப்பா அவர்தான் என்பதையும் இந்த ஒரு ஷாட்டில், எந்த வசனமும் இல்லாமல் நமக்கு உணர்த்திவிடுவார். தான் மனதுக்குள் முதல் மரியாதை கொடுத்து வரும் சிவாஜியின் மனைவியுடைய காதலன் ஊருக்கு, பரிசலில் வருகிறான். அவன் ஊருக்குள் நுழைந்தால், சிவாஜியின் மானம் மரியாதையே போய்விடும் என்பதால், அவனைக் கொன்று போடுகிறார் ராதா. ‘நம் குடும்பத்தைக் காப்பாத்துற குலசாமி நீதாம்பா’ என்று தன் மாமன், காலில் விழுந்து கேட்டதற்காக, வடிவுக்கரசியைக் கல்யாணம் செய்து கொள்கிறார் சிவாஜி. மாமா, கால் தொட்டு வேண்டிக்கொண்டதால்,அன்று முதல் செருப்பு அணிவதையே தவிர்க்கிறார். சாதியெல்லாம் பார்க்காமல், தன் தங்கை மகன் தீபனுக்கும் செருப்பு தைப்பவரின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் செய்துவைக்கிறார். தன் மகள் அருணாவின் கணவன் ராமநாதன், ரஞ்சனியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு, அறுத்தெடுக்கிறான். அவனுடைய கட்டைவிரலை, வாயால் கவ்விக்கொள்கிறாள். அவளிடம் இருந்தும் ஊரிடமிருந்தும் தப்பிக்க, தன் கட்டைவிரலையே வெட்டிவிட்டு ஓடுகிறான். இதெல்லாம் தெரிந்ததும் தன் மருமகப்புள்ளையை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் சிவாஜி. இவையெல்லாம் கதையோட்டம் அல்ல. மனித வாழ்வியலின் உயிரோட்டங்கள்.
சிவாஜியின் மனைவியாக வடிவுக்கரசி. கறைப்பல்லும் அந்தக் கறையின் வழியே தெறித்து வழிகிற பழமொழிகளும் அந்தப் பழமொழிக்குள் இருக்கிற நச்சு வார்த்தைகளுமாக அசாத்திய நடிப்பை, அசால்ட்டாகத் தந்திருப்பார். இன்னும் உயரம் தொடவேண்டியவர் வடிவுக்கரசி. ராட்சச நடிப்புக்குச் சொந்தக்காரர். இதிலும் பிரம்ம ராட்சஷிதான். ராதாவுக்காக சிவாஜி ஆடு விலை பேசி விற்கும் காட்சியாகட்டும். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதாகட்டும். ‘நம் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுபவள் இவள்தானா? ‘அட நீதானா அந்தக்குயில் என்று நெக்குருவதாகட்டும்’, ஊரைவிட்டு ஓடிப்போக முயல்கிற காதல் ஜோடியை வெட்டப் புறப்படுவதும், அப்போது ராதாவின் கேள்விகளால், அரிவாளின் முனையும் அவரின் கோபமும் மழுங்கிப் போவதாகட்டும், ‘நான் எனக்காக சாப்பிடல. உனக்கு வவுறு வலிக்கக்கூடாது பாரு. அதுக்காகத்தேன்’ என்று சப்புக்கொட்டி சாப்பிடுகிற த்வனியாகட்டும்... 1952ம் ஆண்டு தொடங்கிய சிவாஜியின் பயணத்தில்... 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வந்த ‘முதல் மரியாதை’ சிவாஜி... புது சிவாஜிதான்! ஆர்.செல்வராஜின் கதையும் கனம். வசனமும் ஆழம். வழக்கம் போல், கண்ணனின் கேமிராக்கண்கள், கவிதை எழுதியிருக்கும். ‘ஏ கிளியிருக்கு’, ‘ஏறாத மலை மேல’, ‘ஏ குருவி...’, ‘பூங்காத்து திரும்புமா’, ‘அந்த நிலாவைத்தான் நான் கைல புடிச்சேன்’, ‘வெட்டி வேரு வாசம்’, ‘ராசாவே உன்ன நம்பி’ என்று ‘முதல் மரியாதை’க்கு தன் இசையால் மரியாதை செய்திருப்பார் இசைஞானி இளையராஜா. இமய நண்பனுக்கும் இமய நடிகருக்குமான மரியாதை அது. வைரமுத்து மட்டும் என்ன... பாட்டு வரிகளெல்லாம் வைரங்கள்; முத்துக்கள். அப்போதெல்லாம் கேசட்டுகளின் காலம். ரிக்கார்டும் உண்டு; கேசட்டும் வரும். ‘முதல் மரியாதை’ கேசட்... விற்பனையிலும் மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத்தந்தது. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று பாரதிராஜாவின் முன்னுரையுடன் தொடங்கி... பின்னர் வைரமுத்துவின் வரிகளும் அவரின் குரலும் நம்மை மயக்கிப்போடும். அப்போது, டீக்கடைகளிலெல்லாம், தேநீர்ச்சுவையுடன் இந்தப் பாடல்களையும் போட்டுக் கலந்து தருவார்கள். ‘ஆனால் ஒரு சந்திரனைப் பார்த்து, தாமரை மொட்டு, அவசரப்பட்டு, அவிழ்ந்துவிடுகிறது. சந்திரன் சபைக்கு வருகிறது. தாமரை செய்த குற்றத்துக்கு சந்திரனுக்கு தண்டனையா?’ என்று வைரமுத்து கம்பீரக்குரலில் சொல்லியதை அடுத்து, ‘ராசாவே உன்ன நம்பி’ பாடல் ஒலிக்கும். அந்தக் கால ரசிகர்களுக்கு வாய்ப்பாட்டு கூட மறந்திருக்கும். இவை அப்படியே நினைவில் கல்வெட்டென பதிந்திருக்கும். 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’. தீபாவளியையும் தாண்டி சக்கைப்போடு போட்டது. இன்றைக்குத்தான் படம் வெளியான நாள். கிட்டத்தட்ட, படம் வெளியாகி, 35 வருடங்களாவிட்டன. 36 வது வருடம் ஆரம்பித்துவிட்டது. இன்னும் எத்தனை வருடங்களானாலும் கூடிக்கொண்டே இருக்கும் ‘முதல் மரியாதை’க்கான மரியாதை. ஏனெனில்... இது சிவாஜியின் ‘முதல் மரியாதை’. ராதாவின் ‘முதல் மரியாதை’. இளையராஜாவின் ‘முதல் மரியாதை’. வைரமுத்துவின் ‘முதல் மரியாதை’. மொத்தத்தில்... பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’.

வெள்ளி, 10 ஜூலை, 2020

பக்குவம்

*பக்குவம்* என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!

கவியரசு கண்ணதாசன்

🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

🌼நல்லது.

🌼`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,
அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?

🌼அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

🌷பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்
எல்லாம் அவன் செயல்.🙏

மன்னிப்பே சுகத்தின் வழி

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*மன்னிப்பே சுகத்தின் வழி..!!*

உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம் தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும்.

*உறவுச் சிக்கல்கள்..*

வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன?

ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால் தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும் தான். இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவினர்கள், பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன.

*காப்பது எம்பதி..*

குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறி விட்டது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக் கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை!

உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப் போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள். உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும். இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும். அதற்கு முதலில் சில பல பாடங்கள் அவசியம்.

*பார்வைக் கோணம்..*

எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள்.

எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறு பலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பிறரைக் குற்றம் சொல்லு முன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது இந்த எம்பதியை வளர்க்கும். எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள்.

*மன்னிப்பு..*

பிறர் செய்த தீங்கால் மனதில் வரும் வன்ம எண்ணம் கூட மிகவும் தீமையானது என்று சொல்கிறார் புத்த மகான். வெறுப்பு அன்பை வளர்க்காது. பழி உறவைச் சரி செய்யாது. ஒன்று மட்டும் தான் உறவைச் சுகப்படுத்தும் வழி. அது மன்னிப்பு. மன்னிப்பவர்கள் திடமானவர்கள். அன்பு மயமானவர்கள். அறிவாளிகள். வெறுப்பும் கோபமும் எதிராளியை விட தன்னை அதிகமாக அழிக்கும் என்று உணர்ந்தவர்கள். சிக்கல் சங்கிலியைத் தங்கள் பக்கத்திலிருந்து அறுக்கத் தெரிந்தவர்கள்.

மன்னிப்பவர்கள் தாழ்ந்து போவதில்லை. மாறாகப் பெரும் ஆன்மப் பலம் பெறுகிறார்கள். உறவுகளில் குற்றம் பார்த்தால் நீங்கள் தனிமைப் பட்டுப் போவீர்கள். எதிராளியின் பலவீனத்தை உணர்ந்து, அந்த நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, மன்னித்து விடும்போது மீண்டும் உறவு பலப்படும். மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இல்லை. அதை உங்கள் எதிராளி மட்டும் செய்யவில்லை. அதே போல நீங்களும் தவறே செய்யாத பிறவி அல்ல. பிறர் தவறை மன்னிக்கையில் நீங்கள் உங்கள் தவறுகளுக்கு உங்களை மன்னிக்கிறீர்கள். அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல சக்திகள்.

‘என் வாழ்க்கையில் என்னைக் காயப்படுத்திய அனைவரையும் மனமாற மன்னிக்கிறேன்!’ என்ற அஃபர்மேஷன் உங்களுக்கு அமைதி தரும். பல உடல் உபாதைகளிலிருந்தும் காப்பாற்றும்.

*💗வாழ்க வளமுடன்💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

புதன், 8 ஜூலை, 2020

மென்மையாக கோபப்படு

🌴 *மென்மையாக கோபப்படு!*

🌻மனைவிக்கு கோபம் வந்தால் சமைக்காமல் படுத்துக் கொள்வாள்.

🌻அம்மாவுக்கு கோபம் வந்தால் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக் கொள்வாள்.

🌻கோபத்தின் நிறம் ஒன்று தான். அதை வெளிப்படுத்தும் விதம் மென்மையாக இருப்பது நல்லது.

🌻காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற மன்னர் அங்கே ஒரு மான் குட்டியை வேட்டையாடினார்.

🌻அந்த மான்குட்டியை அரண்மனைக்கு எடுத்துப் போகும்படி தன்னுடன் வந்த வேலைக்காரனிடம் கூறினார்.

🌻மான்குட்டியைத் தொடர்ந்து பதற்றமுடன் வந்தது அதன் தாய். அந்தத் தாயின் பாசத்தையும் பரிதவிப்பையும் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த வேலைக்காரன் அந்த மான் குட்டியை தப்பி ஓடவிட்டு விட்டான்.

🌻அப்புறமென்ன, விஷயம் தெரிந்ததும் அரசன் ஆத்திரப்பட்டான். அவனது வேலையைப் பறித்து வெளியே துரத்தப் பட்டான்.

🌻ஒரு வருடம் கடந்து போய்விட்ட நிலையில், ஒரு நாள் அந்த ஏழை வேலைக்காரனுக்கு மன்னரிடம் இருந்து அழைப்பு வந்தது.

🌻‘உன்னை இளவரசரின் ஆசிரியராக நியமிக்கிறேன்’ என்று மன்னர் அறிவித்தார். அந்த ஊழியனின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது.

🌻 “மன்னா! முன்பு உங்கள் சொல்படி நடக்காத இவனுக்கு இந்தப் பணி கொடுத்திருக்கிறீர்களே...?” என்று மன்னருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், காதோரம் முணுமுணுத்தார்.

🌻“மான்குட்டி மீது பரிவு காட்டியவன், என் மகன் மீதும் பரிவு காட்டுவான். நன்றாகப் பார்த்துக் கொள்வான். என்று நம்புகிறேன்” என்றான் அந்த மன்னன்.

🌻பிறர் மீது இரக்கப்படுபவர் இறைவனின் கருணையைப் பெறுபவர், என்பதற்கு இந்தக் கதை ஒரு சோற்றுப் பதம்.

🌻பரிவு என்பது பன்னாட்டு மொழி. எல்லா தேசத்திலும் அந்த மொழியால் பேச முடியும். ஊமைகளாலும் அந்த மொழி பேச முடியும். செவிடர்களாலும் அந்த மொழியைக் கேட்க முடியும்.

🌻நாமும் பரிவு என்னும் மொழியை அவ்வப்போதாவது பேசவோம். அப்போது தான் நம் சந்ததி பிறரின் பரிவு பெறும்.

🌻 “அன்பில் நம்பிக்கை வை, அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடிவிடாதே! என்கிறார் தாகூர்.

🌻சில காரணங்களுக்காகப் பலரையும் விரும்புகின்றோம். காரணத்தையும் மீறிச் சிலரை நேசிக்கின்றோம்.

🌻அதற்கு பெயர் தான் அன்பு. அந்த அன்பு என்னும் பொக்கிஷம் உங்களிடம் இருந்தால் உங்கள் மீது பிறர் பார்வையும் இறைவனின் கனிவும் உங்களை நோக்கி இருக்கும்.

🌻முன்பொரு காலத்தில் எந்த விலங்கும் இல்லாமல் மனிதர்கள் இருந்த காலத்தில் உலகம் முழுவதும் குதிரைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன.

🌻ஓரிடத்தில் நிறைந்திருந்த புல்வெளியில் ஒரே ஒரு குதிரை மட்டும் மேய்ந்து வந்தது. அதனால் அந்த புல்வெளி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கிடந்தது.

🌻ஒருநாள், எங்கிருந்தோ வந்த ஒரு மான் புல்லை மேய்ந்ததுடன் இங்கும் அங்கும் ஓடித் திரிந்து வயல்வெளியை, புல்வெளியை நாசப்படுத்தியது. அது அங்கு சுதந்திரமாக இருந்தது.

🌻இதைக் கண்டு குதிரைக்கு கோபம் பொங்கியது. அந்த மானை எப்படிப் பழிவாங்குவது. அதை விரட்டி அடிக்க வழி என்ன என்று யோசித்தது.

🌻எனவே, இந்த விஷயத்தில் தனக்கு உதவும்படி பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரனிடம் கோரியது குதிரை.

🌻 ‘அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. செய்து விடலாம். நீயும் உதவி செய்ய வேண்டும். முதலில் நான் சொல்கிறபடி செய்.

🌻இதோ இந்தக் கடிவாளத்தை உன் வாயில் மாட்டிக் கொள். பிறகு உன் முதுகின் மேல் நான் உட்கார்ந்து கொண்ட பிறகு அப்படியே அந்த மானை அம்பால் வீழ்த்தி விடுவேன். சம்மதமா...?” என்று மனிதன் கேட்டான். ‘சரி’ என்று குதிரை ஒப்புக் கொண்டது.

🌻குதிரையின் வாயில் முதல் முறையாகக் கடிவாளம் ஏறியது. அதன்மீது ஏறிஅமர்ந்தான் அந்த மனிதன் மானைப் பார்த்து அம்பு விட்டான். மான் தப்பி ஓடிவிட்டது.

🌻அடுத்து குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து விரட்டி இங்கும் அங்கும் ஓட்டினான். குதிரையும் அவன் கட்டளைப்படி ஓடியது. பிறகு, தனது தோட்டத்தில் குதிரையை பிடித்து கட்டி வைத்தான். குதிரை அவனுக்கு அடிமையானது.

🌻அதன் பிறகு குதிரைகள் இன்று வரை மனிதர்களுக்கு அடிமைகளாக அவனைச் சுமந்து திரிகின்றன.

🌻பழிவாங்க நினைப்பது ஆபத்தானது. ஒரு கட்டத்தில் அது எதிரியை மட்டுமல்ல, நமக்கே பாதிப்பைத் தரும்.

🌻விட்டுக்கொடு, விட்டுக்கொடு உனக்கு வேண்டியது கிடைக்கும். இதுதான் நட்பை, குடும்ப வாழ்வை சந்தோஷம் கொள்ளச் செய்யும் செயல்.

🌻ஐந்து வினாடி நாம் புரியும் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால்,

🌻எப்போதும் முகத்தில் புன்னகை கொண்டிருந்தால் அது *வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும்* என்று எண்ணிப்பாருங்கள்.

கார்த்திக் எனும் கதாநாயகன்


********************************
சினிமா துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது. கார்த்திக் என்ற பெயரில் "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் திரு. பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா "முத்துராமன்" அவர்களின் அகால மரணம்.
இரண்டாவது படம் தோல்வி... அடுத்தடுத்து ஏதேதோ ஓட்டம். தொடர் முயற்சி.
ஒரு கட்டத்தில் "நவரச நாயகன்" என்ற பட்டதோடு கார்த்திக் தன்னை நிரூபிக்க ஆரம்பிக்கிறார். தனக்கென்று ஒரு ஸ்டைல்... தனக்கென்று ஒரு சார்மிங்... தனக்கென்று ஒரு பாவனை... நடை.....ஓட்டம்.. சிரிப்பு.... அழுகை.. கண் சிமிட்டல்.. சோகம்.. கோபம் என்று நவரசங்கள் அவர் உடல் மொழியில் நாட்டியமாடத் துவங்குகிறது.
"கோகுலத்தில் சீதை" படத்தில், அந்த கதாபாத்திரமே சிக்கலான கதாபாத்திரம். கொஞ்சம் நழுவினாலும் தலை குப்புற விழுந்து விடும் பாத்திரப்படைப்பு. ஆனாலும் அனாயசமாக நடித்து தன்னை நிலை நிறுத்தியிருப்பார். அதுவும் இறுதிக் காட்சி பேருந்தில் காசு இல்லாமல் நடத்துனரிடம் டிக்கட்டுக்கு கார்டை நீட்டும் போதெல்லாம்......அது அப்படி ஒரு கிளாசிக் தன்மையோடு இருக்கும்.
"நீ என் குழந்தையை கொன்னுருக்க கூடாது ஆண்டவப்பெருமாள்....." என்று உதட்டில் பட்டும் படாமல் வரும் வார்த்தைகளோடு "அமரன்" பழி எடுக்கும் போது நமக்குள்ளும் ஒரு அமரன் வந்து அமர்ந்து கொண்டு ஐசாலக்கடி பாட்டு பாடுகிறான். மாமா இறந்த பிறகு புத்தி ஸ்வாதீனமில்லாத மாமா பெண்ணை வைத்துக் கொண்டு "பொன்னுமணி" அழுது தீர்த்ததெல்லாம் சாகாவரம் பெற்ற திரை வெடிப்பு. நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம்...."கிழக்கு வாசல்" படத்தில் அம்மா சாவுக்கு நியாயம் கேட்க சென்று, என்னதான் தப்பு செய்திருந்தாலும் செய்தவர் ஊர் பெரியவர் எனும் போது சட்டையைப் பிடிக்க வேண்டும்.....ஆனாலும் அதில் ஒரு தடுமாற்றமும் வேண்டும் எனபதை அத்தனை அழகாக சட்டையைப் பட்டும் படாமல் பிடித்து கேள்வி கேட்டு அழுது கொண்டே ஆத்திரத்தை காட்டும் அந்த காட்சிக்கு கலங்காத கண்களில் ஒருபோதும் கண்ணீர் இல்லை.
"பல்லாக்கு குதிரையில் பவனி வரும் மீனாட்சி" என்று கனகாவை மீட்டெடுக்க நம்பியாரோடு சேர்ந்து கட்டும் கூத்தில் மீனாட்சியை மீட்டெடுக்க வந்த சுந்தர பாண்டியனாகவே ஜொலிப்பார். ஒரு கட்டத்தில் சீரியசான தன் தோற்றத்தில் இருந்து சற்று விலகி நடித்த படம் "உள்ளத்தை அள்ளித்தா". அதில் தனக்கு காமெடியும் வரும் என்று கவுண்டமணியோடு சேர்ந்து அடித்த கூத்தில் தமிழகம் கண்களில் நீர் வர சிரித்தது.
இளையராஜாவின் பாடல்களில் அதுவும் இளையராஜா பாடிய பாடல்கள் சரியாக பொருந்தக் கூடியவர் இவர். "தெய்வ வாக்கு" படத்தில் வரும், " வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்..."  பாடலாகட்டும்..."தர்மபத்தினி" படத்தில் வரும், " நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாடலாகட்டும்.... "பகவதிபுரம் ரயில்வே கேட்" படத்தில் வரும்..." செவ்வரளி தோட்டத்துல உன்ன நினைச்சேன்...."  பாடலாகட்டும்....இன்னும் இன்னும் நிறைய      பாடல்கள் அப்படி கனக்கச்சிதமாக பொருந்தும். அதில் ஒரு கனத்த சோகம் அப்பிக் கிடப்பதை ஆரவாரமின்றி அசை போடுவது தனித்த மனக்கிளர்ச்சி.... .
"என் ஜீவன் பாடுது" படத்தில் முதல் காட்சியிலேயே இறந்து, படம் முழுக்க ஒரு ஆவியாக வலம் வருவார். அபத்தம்....சாத்தியம் எல்லாவற்றையும் தாண்டி அந்தப் படத்தில் ஒரு ஜீவன் இருப்பதை உள் வாங்க முடியும். காதலுக்கு  உருகும் கண்களில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஒட்டிக் கொள்ளும் பட்டாம்பூச்சியை சிமிட்டிக் கொண்டே இருப்பதெல்லாம் தனித்து பெற்ற வரம். எத்தனையோ ஜோடிகளோடு அவர் நடித்திருந்தாலும் 'கனகா'வோடு நடிக்கையில் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும்.
"ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்கிறது நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே" பாட்டில் நடந்திருக்கும் மேஜிக்கை பார்த்தால் உணர முடியும்.
மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது என்பார்களே... அது தான், " தானா சேர்ந்த கூட்டம்"  படத்தில் அவரின் நடிப்பு. கார்த்திக் போன்ற நவரச நாயகர்களுக்கு வயதாவதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை.
பள்ளி விட்டு வீடு வருகையில், தூரத்திலேயே கேட்டு விடும்  "பச்சை மலை பூவு நீ உச்சி மலைத்தேனு" பாட்டு, முடிவதற்குள் ஓடி வரும் ஒரு வித தேடலின்பால் கார்த்திக் என்றொரு நடிகன்... அந்த சின்ன வயதிலேயே மனதுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இன்னமும் அவர் அதே சிம்மாசனத்தில் தான்... இருக்கிறார். எல்லா வகையான படங்களையும் செய்த கார்த்திக் 80களின் சினிமா நாயகர்களின் தனித்த நட்சத்திரம் என்றால் அது சாலப் பொருந்தும். எல்லாவற்றையும் தாண்டி இந்த நடிகனுக்குள் எப்போதும் தீராத ஒரு மென்சோகம் இருப்பதாய் நம்பும் நம்பிக்கையில் ஒரு வித தன்னிலை, ரசிகனுக்கு கிடைப்பதாய் நம்புகிறேன். "வசந்த பூங்காற்றே" பாடல் வரும்  "சோலைக்குயில்" படத்தில் நாயகியாக வரும் அந்த குயிலை படம் முடிவதற்குள் நிஜ வாழ்விலும் கரம் பற்றிய கார்த்திக் நிஜ வாழ்விலும் காதலால் ஆனவர் தான். தனிமை விரும்பியான அவர் நிறைய பயணங்கள் காடுகளுக்குள் செய்வார் என்பது கூடுதல். வாழ்வென்ற நாடக மேடையில் காதலிக்கப்படுவதற்கே பிறந்த கதாபாத்திரம் அவர்.
கேள்விப்பட்ட வரை... எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமல் ஸ்பாட்டில் வந்து வெளுத்து வாங்கும் இவரின் நடிப்புக்கு பெருந்தீனி இன்னும் இந்த சினிமா உலகம் போட்டிருக்க வேண்டும்... என்ற ஆதங்கம் எப்போதும் போல இப்போதும் உண்டு. எப்போதும் ரசிக்கும் ஒரு முகத்தில்...... ஒரு குறும்பு உடல்மொழியில்........ நவரச நாயகன், " அசோக் விஷ்வநாத்" என்று கண்களில் தீ பறக்க சொல்லும் "அக்கினி நட்சத்திரம்" படமெல்லாம் பார்க்க பார்க்க பரவசம்.
"பூங்காவனம்" பாட்டு முடிகையில் நிரோஷாவிடம் சொல்லும் ஐ லவ் யூ வெல்லாம்......காலத்துக்கும் காதோரம் கிசுகிசுக்கும் மெல்லிசை.
"தெய்வ வாக்கு" படத்தில்.... அவர் சம்பந்தபப்ட்ட காட்சிகளை ஒரு சூழலில்...25 நாட்களுக்கு மேல் அவரே இயக்கினார் என்பதும் அந்த காட்சிகள் எல்லாம் தனித்துவமானவையாக இருக்கும் என்பதும்.... அவர் ரசிகர்களுக்கே புது செய்தி. ஆகச் சிறந்த இயக்குனரை சுமந்து கொன்டு அலையும் இந்த கலைஞனை நாம் விட்டு விட்டு நகர முடியாது.
அஷ்டாவதானி எங்கோ அடி சறுக்கி போனதெல்லாம்.... நம்ப முடியாத அவஸ்தை.
கவிஜி

ஒரு கிராம் எதிரி

Rajesh Kumar

 டாக்டர் சுப்பிரமணிய நாராயணன் ஒரு பொறியாளர் . பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் . சென்னை ஐஐடியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம்  பெற்று , ஜெர்மனியில் பணிபுரிந்தவர் . இப்போது அமெரிக்காவில்  இருக்கிறார்.

 இவர் கொரோனா பற்றி சொன்ன ஒரு
விஷயம் யோசிக்க வைக்கிறது.

 இன்று உலகம் முழுவதும் , 5 லட்சம் பேரை பலி கொண்டுள்ளது கரோனா வைரஸ்.
நானோ தொழில்நுட்பத்தால்  கொரோனா வைரஸ் போன்ற நுண்ணுயிரின் எடையை அறியலாம்

 அந்தவகையில் , ஒரு கொரோனா வைரசின் எடை 0.85 அட்டோ கிராம் . அதாவது ஒரு கிராம் எடையை 10 லட்சத்தில் வகுத்தால் கிடைக்கும் ஒரு பகுதி அட்டோகிராம் ( Attogram)  எனப்படுகிறது .

ஒரு மனிதனை நோயில் வீழ்த்த , சுமார் 7 ஆயிரம் கிருமிகள் தேவைப்படுகின்றன . இவற்றின் மொத்த எடை 0.0000005 கிராம்.

இப்போது உலகம் முழுதும் இந்த கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 20 லட்சம் . இந்த 20 லட்சம் பேரையும் தாக்கியுள்ள கரோனா வைரஸ்களின் மொத்த எடை எவ்வளவு என்று கணக்கிட்டால் நமக்கு கிடைப்பது
1 கிராம் மட்டுமே.
உலகம் முழுவதும் , அதாவது மனித இனம் முழுவதும் இந்த ஒரு கிராம் வைரஸ்களையே எதிர்கொள்ள முடியாமல்
போராடிக் கொண்டிருக்கிறது.

மனிதன் தனது தற்பெருமை , அறிவியல் சாதனைகள் என பீற்றிக்கொள்ளும் பிம்பங்களை உடைக்கப் போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு கிராம் கொரோனா வைரஸ்.

  கொரோனா என்கிற இந்த அரை உயிரி வைரஸ் ஆறறிவு படைத்த மனித குலம் முழுவதையும் , மண்டியிடச் செய்து கை கூப்ப வைத்துவிட்டது.

அறிவாய் மனிதா....
உன் ஆணவம் பெரிதா?

பாடல் வரி காதில் கேட்கிறது.

கொரானாவை வெறறி கொண்ட தம்பி

வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான் தம்பி.

30 வயதுதான். திடகாத்திரமானவன். 70 கிலோ எடை. ஐந்தேமுக்கால் அடி உயரம். புகை, மது, மாது, இத்யாதிகளென்று கெட்டப் பழக்கமென சமூகம் சுட்டும் எந்தப் பழக்கமும் இல்லாதவன். சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி நாட்டு மருத்துவம் வரை நல்ல பரிச்சயம் கொண்டவன். ஆரோக்கியம் மீது அத்தனை அக்கறை. லிட்டர் லிட்டராக கபசுரக் குடிநீர் அருந்தி, எப்போதும் கைகளை சானிட்டைஸ் செய்து, மாஸ்க் அணிந்து உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரமாகக் கடைப்பிடித்தவன்தான்.

வீழ்ந்தவன் அப்படியே மயக்கநிலைக்குப் போனான். அண்ணன் சிவராமன் மடியில் தாங்கியிருக்க, அவனது வாயில் தண்ணீரை ஊற்றினேன். நாக்கை மடக்கி தண்ணீரை உட்கொள்ள மறுத்தான். முகத்தில் பளிச்சென்று குளிர்ந்த நீரை அடித்தவுடன் மயக்கம் தெளிந்தான்.

“ஒண்ணுமில்லைண்ணா. சாப்பாடு ஒத்துக்கலை. வாந்தி வர்றமாதிரி இருக்கு...” என்றவன் ஓங்காரத்தோடு வாந்தியெடுத்தான்.

உடனடியாக மருத்துவரைப் போய் பார்த்தான். ‘ஃபுட் பாய்ஸன்’ என்று சொல்லி, ஏதோ மாத்திரைகளை தந்திருக்கிறார்கள். அடுத்தநாள் வழக்கம்போல வந்தான்.

அவனுக்குள் என்னவோ தோன்றியிருக்கிறது. மீண்டும் மருத்துவரைப் பார்த்தபோது ‘கோவிட் டெஸ்ட்’ எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

உடனடியாக டெஸ்ட் எடுத்தான். ரிசல்ட் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆனது. அதற்குள் அவனுக்கு புதிதாக மூச்சுத்திணறல் பிரச்சினை. காலையில் சரியாக இருப்பவனுக்கு மாலை ஆனாலே மூச்சுத்திணறல்.

ஆம்புலன்ஸைக் கூப்பிடப் போன அறை நண்பர்களிடம், “ஆம்புலன்ஸெல்லாம் வந்தா ஏரியாவில் பிரச்சினை ஆயிடும். ரூமை கூட காலி பண்ணச் சொல்ல சான்ஸ் இருக்கு” என்று மறுத்திருக்கிறான்.

அடுத்தநாள் மூச்சுத்திணறல் இன்னும் மோசமானது. இதற்கிடையே ரிசல்ட்டும் வந்தது. பாசிட்டிவ்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மூச்சுத் திணறித் திணறி தொலைபேசியில் கதறுகிறான். “எப்படியாவது காப்பாத்துங்கண்ணா...” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

நம் தொடர்புகள் அத்தனைப் பேரிடமும் பேசி அவனுக்கு உதவ ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்த நிலையில், திரும்பத் திரும்ப போன் செய்து கதறிக் கொண்டே இருக்கிறான். “மூச்சு விட முடியலைண்ணா... ரொம்ப கஷ்டமா இருக்கு...”

கையறு நிலை.

மறுநாள் அவனுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. நுரையீரல் 35% பணியாற்றவில்லை என்பதைக் கண்டறிந்தார்கள். உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது.

அரசு மருத்துவமனை அளித்த சத்தான உணவு, கனிவான சேவையில் அடுத்த இரண்டு நாட்களில் இயல்பாக சுவாசிக்குமளவுக்கு தேறினான்.

கடந்த ஐந்து, ஆறு நாட்களாக அவனுடைய உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருந்தது. நேற்றைய பரிசோதனைகளில் அவன் கோவிட்டிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது தெரிந்தது. நுரையீரலில் இப்போது வெறும் 5%தான் பாதிப்பு. அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் சரியாகி இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஆரோக்கியத்தை எட்டிவிடுவான்.

இடைப்பட்ட நாட்களில் தினமும் இருமுறை அவனோடு பேசிக்கொண்டிருந்தது மட்டுமே இச்சூழலில் நம்மால் செய்யமுடிந்த உபகாரம். கொரோனாவை கவனமாகத் தவிர்த்து டிக்டொக் தடை, ரவுடி பேபி தற்கொலை முயற்சி, விஜய் வீட்டில் பெண் எடுக்கும் அதர்வாவின் தம்பி என்று பேசிப்பேசியே தம்பியை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தாயிற்று.

பத்து நாட்கள் ஆஸ்பிட்டல் வாசம் முடிந்து இன்று டிஸ்சார்ஜ்.

சொர்க்கத்தின் வாசல் வரை சென்று, கடவுள் என்று சொல்லப் படுபவருக்கு ‘ஹாய்’ சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறான்.

மிக நெருங்கிய தம்பிக்கு நேர்ந்த கொரோனா அனுபவம் இது.

“அவங்கள்லாம் வெறும் டாக்டர்கள்தான். கடவுள்கள் இல்லை. நமக்குத் தெரிஞ்சதுதான் அவங்களுக்கும் தெரியும்.”

“கொரோனான்னு ஒரு நோயே இல்லை. அது சைனீஸ் கான்ஸ்பிரஸி.”

“அலோபதியிலே ஏமாத்துறானுங்க. சித்த மருத்துவத்துலேதான் இதை சரி பண்ண முடியும்”

“உப்புத் தண்ணியிலே வாயைக் கொப்பளிச்சா போதும்.”

....இம்மாதிரி கொரோனா குறித்து ஏகப்பட்ட கருத்துகள் சோஷியல் மீடியாவில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால் இஷ்டத்துக்கும் பரப்பப்படுகிறது.

தம்பிக்கு நேர்ந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

ஹோமியோபதி / சித்த மருத்துவம் / யுனானி / ஆயுர்வேதம் / அக்குபஞ்சர் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது எனக்கும் பெரிய மதிப்புண்டு. வைரைஸை எதிர்கொள்ளும் ஆற்றலுக்கு நானும் ஹோமியோபதி மருந்துகளைதான் உட்கொள்கிறேன்.

ஆனால் -

உயிர் போகும் அவசத்துக்கு அலோபதிதான் உதவும். அவர்களிடம்தான் ஆக்சிஜன் மாஸ்க் இருக்கிறது. வெண்டிலேட்டர் முறையில் சுவாசம் கொடுக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. நுரையீரல் எவ்வளவு சதவிகிதம் பணியாற்றுகிறது என்பதை அறிந்துக்கொள்ளும் மருத்துவப் பரிசோதனை முறைகள் இருக்கின்றன.

இதுமாதிரி மருத்துவ உபசரணைகள் தேவைப்படாத, கொரொனா பாசிட்டிவ்.. ஆனால் மூச்சுவிடும் பிரச்சினைகள் இல்லாதவர்கள்  வேண்டுமானால் சித்த மருத்துவம் உள்ளிட்ட மற்றவற்றை முயற்சிக்கலாம்.

கோவிட் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததுமே, சம்மந்தப்பட்ட நோயாளிக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிந்தால் சித்த மருத்துவ முகாமுக்கு அலோபதி டாக்டர்களே கூட அனுப்புகிறார்கள். அவர்களும் சித்த மருத்துவத்துக்கு எதிரிகளெல்லாம் இல்லை.

அடுத்து -

அரசு மருத்துவமனையென்றால் அலட்சியப் படுத்துவார்கள் என்று தனியார் மருத்துவமனைகளில்தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்ற மூடநம்பிக்கை.

அரசு முகாம்களில் அஞ்சு பைசா செலவில்லாமல், கொரோனாவிலிருந்து பல ஆயிரம் பேர் விடுதலை பெற்றிருக்கிறார்கள். இதைவிட சிறந்த சிகிச்சையை எந்தத் தனியார் மருத்துவமனையும் வழங்கியதாகத் தெரியவில்லை. ஆனால், பல லட்சங்களை கருணையே இன்றி கறந்திருக்கிறார்கள். 15 நாட்கள் சும்மா வைத்திருந்து பாராசிட்டிமால் போட்டு அனுப்பியதற்கு மூன்றரை லட்சம், நான்கு லட்சம் தண்டம் அழுதிருக்கிறார்கள். சில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் 10, 15, 20 லட்சமெல்லாம் செலவாகிறது என்றெல்லாம் கூட சொல்கிறார்கள்.

இந்த கொரோனாவை எதிர்கொள்ளக் கூடிய நல்ல அனுபவமும், ஆற்றலும் தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளுக்கே பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது. சிகிச்சையும் இலவசம். ஃபைவ் ஸ்டார் ஓட்டலில்தான் டிஃபன் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களை நாம் கையைப் பிடித்து இழுக்க முடியாது. அது அவரவர் விருப்பம்.

தம்பி விஷயத்தில் எல்லாம் நலமாக முடிந்தது என்றாலும், “எப்படியாவது காப்பாத்துங்கண்ணா...” என்கிற குரல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சரி, மயங்கி விழுந்த தம்பிக்கு சிஷ்ருசை செய்த நானும், சிவராமனும், அவனை ரூமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இன்னொரு தம்பி லலித் சர்மாவும் என்ன ஆனோம்?

ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டோம். காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் என்று எந்த அறிகுறிகளும் இல்லையென்று தெரிந்தவுடன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம்.

வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனாவிலிருந்து உங்களை மருத்துவர்கள் மட்டுமே காக்க முடியும். இச்சூழலில் அரசு மட்டுமே நமக்கு இறுதி நம்பிக்கை.

செவ்வாய், 7 ஜூலை, 2020

நிரந்தரமில்லை

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

*💗சிந்தனை கதை...*

*இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை..!!*

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...

விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

மருத்துவரைக் கண்டதும் கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை, மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார். "கையறு நிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனு முனுத்தார். அறுவை சிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது... மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், "உங்கள் மகன் பிழைத்து விட்டார்" என்று சொன்னபடி,

"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய் விட்டார். சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், "அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?" என்று நொந்து கொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்... இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் சடங்கில் இருந்தார். உங்கள் மகனுக்காக
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்து விட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றி விட்டார்... இப்போது மீண்டும் மகனை அடக்கம்
செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.

நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!

*"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை... மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."*

*இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை...*

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

அப்பா இன்னொரு கடவுளா?

அப்பா........🙏🙏🙏🙏🙏🙏

கணேசன்  எழுபது   வயதைக் கடந்த தாத்தா.  ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். 

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். 
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார்  கணேசன்.

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல்,  பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. 

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. 

அந்த சமயத்தில் ஒருவர் கணேசனின்  பக்கத்தில்
வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் கணேசன்! 
நான் தான் கடவுள்.  உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் கணேசன். 
யோசித்தார். 
பிறகு பேசினார்.

""கடவுளே!  என் அப்பாவை நான் பார்க்க வேண்டும்.  அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""
என்று கேட்டார் கணேசன்..

""மிஸ்டர் கணேசன்!  நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு.   இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே!  ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் கணேசன்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார்.  தண்டித்திருக்கிறார்.  அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும்.  மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன்.  ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது.  அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் கணேசன்.

''அதெல்லாம் சரி!  உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''
என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை.  திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார்.  ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை.  அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் கணேசன்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து  விடுவார்.  ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். 

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர்.  ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார். 

நான் என் மகனை அவனது  பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக  உருவாக்குவேன். 

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா?  உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''
என்று கேட்டார் கணேசன். 

அமைதியானார் கடவுள். 
மீண்டும் கணேசன் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை  விட்டார் தசரதன்,

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன்,

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர். 

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம்.  அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'. 

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன்.  ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை.  அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் கணேசன்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள். 
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன்.  பக்கத்தில் ஒரு பெண்.  என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார். 

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன்.  ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது. 

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது.  என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன்.   வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார்.  அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது. 

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார்.  கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார்.  அது ஒரு இன்ப அதிர்ச்சி.  பஸ் கிளம்பியது.  அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள். 

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார்.  அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன்.  மோதிரத்தை அவரிடம் காட்டினேன்.  அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.  ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார். 

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் கணேசன்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் கணேசன்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை.  ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள். 
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன்.  ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை. 
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.   

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது.  அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் கணேசன்..

கடவுள் சிரித்தார். 

‘கடவுளே!  அப்பா என்பது உன்னதமான உறவு.   நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் கணேசன்.

':அதெல்லாம் சரி!  அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன்.  நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து  வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று.  அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம்.  அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது கணேசனின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது. 

‘மிஸ்டர் கணேசன் !  நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார். 

இதோ அப்பா நிற்கிறார்.  இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார்.  பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

கணேசன் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்.  இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே!  என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா. 

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் கணேசன். 

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா? 
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான். 

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் கணேசன்.

‘அது முடியாதுப்பா!   என்னோட கதை முடிந்த கதை.  வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய்.  அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய்.  அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான்.   இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும்.  அது நல்ல குழந்தைகளை உருவாக்கும்.  இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது.  நான் பாக்கியசாலி.  நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.   

கணேசன் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் கணேசன்!  போதுமா?  நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே!  நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது.  கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா. 

நான் அழத் தொடங்கினேன்.  யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை. 
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு.... 

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.   

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.  அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன்.  இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'. 

கணேசன் மீண்டும் பேசினார்.

‘கடவுளே!  இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன்.  என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன். 

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.   அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும்.  அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் கணேசன்..
 
( கணேசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும்   மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட  அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.   அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
ஆகவே அப்பா.............. இருந்தால்.................... மதியுங்கள்....................
அப்பா........................ இல்லையேல்....... ..........
நினையுங்கள்..... ............
 அப்பாவின் நினைவாகவே......
50/60 வயதைக் கடந்த எல்லா அப்பாக்களின் மனவோட்டம் இது தான்.