ஒற்றை வார்த்தையில் அத்தனையும் தாண்டிய உயரத்தை எனக்குள் தொட்டு விடுகிறார். அந்த வார்த்தைக்கு வருவதற்கு முன்னால் ரேவதியோடான அறிமுகத்தை பார்த்து விடலாம்.
மீசை முளைக்காத கல்லூரி காலக்கட்டத்திலேயே ரேவதி பரிட்சயம்.. மண்வாசனை படம் பார்த்த அந்த தருணத்தில் இருந்து ரேவதி என்கிற யதார்த்தத்தின் ஆளுமை கண்டு கோப்பெருஞ்சோழன், பிசிறாந்தையார் போலவொரு பரவசம் உணர்ந்திருக்கிறேன். அவர் நடிகைகளின் சொல்லி வைக்கப்பட்டிருந்த வரையறைகளை தகர்த்தெறிந்தவர். துளியும் ஆபாசமில்லாமல் அழகாய் அவரால் அத்துனை படங்களிலும் தரிசனிக்க முடிந்திருக்கிறதென்றால் அந்த அழகு ஆன்மத்திலிருந்து, வேரிலிருந்து விரிவதாய் இருக்கிறதே காரணம்.
அவரின் துள்ளலான, துடுக்குத்தனமான நடிப்பென்றே உணர விடாத அந்த நடிப்பு தமிழ் திரையுலகத்தின் கௌரவங்களில் முக்கியமான கௌரவம்.. நடிகைகளில் சாவித்ரிக்கு இணை இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே யாரும் கிடையாது என்பதை நடிப்புல ஜாம்பவான்கள் பலரும் தங்கள் வாயாலேயே மனதார சொல்லிச் சென்றிருக்கிறார்கள். களத்தூர் கண்ணம்மாவில் ஒரு கட்டத்தில் தன் பிள்ளையான குட்டி கமலை உயிரோடு அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு, பிறக்கும்போதே இறந்துவிட்டதாக தந்தையான எஸ்.வி.சுப்பையா சொல்வார். உடனே சிரித்துக்கொண்டே அழுவார் பாருங்கள்.. செத்துவிட்டேன். அப்படியான சாவித்ரியின் அடையாளங்களை ரேவதியின் நடிப்பில் உணரலாம்.
எனக்கு துடுக்குத்தனமான பெண் கதாபாத்திரங்கள் என்றால் அத்தனை இஷ்டம். கே.பாலசந்தரின் வெள்ளிவிழா என்றொரு படம். அந்த படத்திற்கு பின்னால் ஒரு கதை உண்டு. அப்போது விடுமுறைக்கு ஆண்டிபட்டியில் இருந்த சுப்பிரமணி மாமா வீட்டிருக்கு போயிருந்தேன். அவரும் இன்று இரவு சினிமாவிற்கு போகலாம் என்றுவிட்டார். அது என்ன படம் என்றாலும் பிரேமை தான். மூன்று வயதிலிருந்து அய்யம்மாவை சினிமாவிற்கு அழைத்துப் போய் அழைத்துப்போய் அந்த ருசி என் மனதிலும் ஒட்டிக்கொண்டுவிட்டது. மாமா வேலை முடித்து வர இரவாகிவிடும் என்பதால் செகன்ட் ஷோ போவதென ஏற்பாடு. நான் இரவு செமத்தியாக சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன். எத்தனை எழுப்பியும் எழுந்திரிக்கவில்லை. அதனால் என்னை அப்படியே தூங்கவிட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். மறுநாள் ஒரே அழுகாச்சி. அப்போதிருந்து என்னிடமிருந்து தப்பித்த அந்த வெள்ளிவிழா படம் பிறிதொரு தருணம் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். அந்த வாணிஸ்ரீ கதாபாத்திரம் என் கனவு தேவதை கதாபாத்திரம். அதன் பிறகு அந்த படத்தை டிவிடியில் பத்துக்கும் மேற்பட்டு பார்த்தும், பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்..
பூவேபூச்சூடவா நதியா, வாழையடி வாழை ஜெயச்சித்ரா, நாடோடி மன்னன் பானுமதி, உத்தரவின்றி உள்ளே வா ரமாபிரபா, அரங்கேற்றம் பிரமிளா, புதுவசந்தம் சிதாரா, பாலைவனச்சோலை சுஹாசினி, அவள் அப்படித்தான் ப்ரியா என்று எவ்வளவோ கதாபாத்திரங்கள் உயிருக்கு உயிர்ப்பாகிற பிடித்தங்கள்.
எனக்கு பிடித்த பெண் பிம்பமென்றால் அது துறுதுறுப்பாக, கலகல பட்டாசாக, பூத்துக்குலுங்குகிற தூவானமாக, பாரதித்தனங்களோடான கலவையாக தினந்தினம் புதுசாகிக் கொண்டே இருக்கிற கலவை தான்.
அப்படித் தான் ரேவதி மௌனராகம், பகல் நிலவு, ஒரு கைதியின் டைரி, உன்னை நான் சந்தித்தேன், புன்னகை மன்னன், தேவர் மகன் என பல படங்களில் வாழ்ந்திருப்பார். அவரை நான் நேரில் சந்திப்பதற்கான தருணமும் தற்செயலாகவே வந்தது.
அப்போது நான் இயக்குநர் வஸந்த்திடம் துணை இயக்குநராக இருந்தேன். அவரது படவேலைகள் இன்னும் மும்முரமாகியிருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் தினந்தினம் சந்திப்போம். பாலசந்தர் சார் வீட்டுக்குள் இருக்கிற காவேரி கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். சினிமா, இலக்கியம் என்று பொதுவாக பேசிக்கொண்டு, இடையிடையே பிளாஸ்க்கிலிருந்து சுடச்சுட சங்கீதா காஃபியை எடுத்து அருந்தியபடி. அந்த கதையை பிரிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
அப்படியான ஒரு தருணத்தில் என்னிடம் கேட்டார். ரேவதிக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிற ஆற்றலோடு ஒரு இணை இயக்குநர் தேவையாம். நீ போகிறாயா.. நம்ம ப்ராஜக்ட் ஆரம்பிக்கிறப்போ நீ இங்க வந்துக்கலாம் என்றார். சரி என்று போய் பார்த்தேன்..
அத்தனை பெரிய வீடு. அடையாறு காந்தி நகர். அப்போது அவர் மித்ரு மை ஃபிரண்ட் என்றொரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். நேராக உள்ளே போய்விட்டேன். கண்ணாடி கதவு வழியாக அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர் பார்த்துவிட்டார். உடனே சாப்பிட்ட கையோடு விரலை சுவைத்துக்கொண்டே எனக்கு அழகாக, அவருக்கு பதட்டத்தோடு ஓடி வந்தார். வெளிய காலிங் பெல் இருக்கு அடிச்சிட்டு வந்திருக்கலாமே.. என்னா இங்க நாய் அவுத்து விட்டுருப்பாங்க என்றார் மிரட்சியோடு. உடனே நான் மிரண்டுபோய் சரசரவென பின்வாங்கினேன்.
எனக்கு எப்போதுமே நாய் என்றால் பயம். ஆனால் நாய்களுக்கு என்னிடம் எந்த பயமும் கிடையாது. தெருவில் போனால் கூட என்னை பார்த்து எந்த நாயாக இருந்தாலும் குரைக்காமல் வாலை தான் ஆட்டும். இருந்தாலும் சின்ன வயதிலிருந்தே நாய் என்றால் பயம். எங்கள் கிராமத்தெருவில் மணி என்று ஒரு நாய் இருந்தது. அதன் பார்வையில் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் அந்த தெருவின் மற்றொரு பக்கம் வழியாக தான் வீட்டிற்கே செல்வேன். என்னவோ மணிக்கு நம்மலால குடுக்க முடிஞ்ச மரியாதை..
நான் அத்தனை பயப்படுவேன் என அவர் நினைத்திருக்கவில்லை. உடனே புன்னகையோடு நான் இருக்கன்ல.. சும்மா வாங்க.. என்று உள்ளே தன்னுடைய அலுவலக அறையில் அமர வைத்துவிட்டு, போய், விரைவிலேயே திரும்பி வந்தார். விவரம் கேட்டுவிட்டு, விஜய் தொலைக்காட்சிக்கு ‘கதை கதையாம் காரணமாம்’ என்றொரு தலைப்பில் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு பிரபல எழுத்தாளரின் சிறுகதையோ, குறுநாவலையோ, நாவலையோ எடுத்துக்கொண்டு அதற்கு நான் திரைக்கதை, வசனம் எழுதித் தர வேண்டும். இந்த வாரம் சுஜாதா என்றால் அடுத்த வாரம் பாலகுமாரன் அதற்கடுத்த வாரம் பாலகுமாரன் என்று அந்த வரிசை அப்படியே நீளும். ஒவ்வொருவரின் கதையும் ஒரு வாரத்திற்கு தினந்தினம் ஒளிபரப்பாகும். அப்படியே இணை இயக்குநராக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்ற வேண்டும் என்றார். சம்மதித்தேன்.
அதை விஜய் டீவிக்காக தயாரித்தது ரேவதியின் டெலிஃபோட்டோ நிறுவனம் தான். முதல் கட்டமாக சுபா வெங்கட், எழுத்தாளர் வாஸந்தி, நான், ரேவதி, சண்முகம் போன்றவர்கள் அமர்ந்து வட்டமேஜை மாநாடு நடத்தினோம். அதில் அவரவரை பாதித்த கதைகளை பற்றி ரேவதி பேசச் சொன்னார்.
கரும்பு தின்ன கூலியா சும்மாவே நிறைய பேசுவேன்.. அதுவும் உலக சினிமா, இலக்கியம் பேசுடா என்றால் கேட்கவா வேண்டும். கு.அழகிரிசாமியிலிருந்து, இந்திய அளவில், உலக அளவில் அசத்திய எழுத்தாளர்களின் மனதை தொட்ட படைப்புகளை அடுக்க ஆரம்பித்தேன். அதே பரவசத்தோடு. இடைஇடையே என் முதல் திரையுலக குருநாதர் கே.பாக்யராஜ் சார் கையாளும் அதே ஸ்டைலில் என்னுடைய சில சிறுகதைகள், குறுநாவல்களையும் அதை எழுதியது நான் என்று சொல்லாமலே எடுத்துவிட்டு, ரேவதியிடம் அப்லாஸ் வாங்கிக் கொண்ட தருணங்கள் சுவாரஸ்யமானவை.
சின்ன வயதிலேயே நான் வசந்தா டீச்சரிடம் டியூஷன் படிக்கிற போது, அவர்கள் டீச்சர்களாக சேர்ந்து சினிமாவிற்கு போகிற நாட்களில் நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து நிலாச்சோறு சாப்பிட்டுவிட்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். அங்கே என்னைத் தவிர எல்லோரும் பெண்கள். அவர்கள் என்னை கதை சொல்லச்சொல்லி சூழ்ந்து உட்கார்ந்து கொள்வார்கள். நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என்னோட ஃபிளாவர் கொஞ்சம் தூக்கலாகவே சேர்த்து அந்தந்த கதாபாத்திரமாகவே என்னை உருவகித்துக்கொண்டு கதைப்பேன். அவர்களும் மெய்மறந்து ம் கொட்டிக்கொண்டு கேட்பார்கள்.
அந்த கதை தான் இங்கேயும்.. எழுத்தாளர் வாஸந்தி குழந்தை போல அத்தனையையும் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தவர், என்னுடைய நாவலை கூட ஜெயா தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு கேட்டிருக்கிறார்கள். நீங்கள் திரைக்கதை, வசனம் செய்ய முடியுமா என்று கேட்டார். வாஸந்தியின் சில நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜனனம் மிகவும் பிடிக்கும். கூடவிடே அவரின் மூங்கில் பூக்கள் என்று நினைக்கிறேன். சரி என்று புன்னகைத்தேன்.
எனக்கு தனி அறை ஒதுக்கித் தந்தார் ரேவதி. எல்லா வசதிகளோடும். நான் இயல்பிலேயே வேகம். திரைக்கதை, வசனத்தை சில நாட்களுக்குள்ளாகவே எழுதி முடித்துவிட்டேன். முதலில் நான் திரைக்கதை, வசனம் எழுதியது எழுத்தாளர் சுஜாதாவின் டி.என்.ஏ என்கிற கதைக்கு. அந்த டெலிஃபில்மில் ரேவதியே கதாநாயகியாகவும், இயக்குநராகவும் பணியாற்றினார். உடன் தேவதர்சினி, மேஜர் சுந்தர்ராஜன் போன்றவர்கள் நடித்தார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு சாந்தோமில் இருக்கிற கல்பா ஹவுசில் நடந்தது.
அப்போது தான் சுரேஷ் மேனனை புரிந்து கொண்டேன்.அவரை அலுவலகத்தில் ஒரு முறை பார்த்தபோது எழ யத்தனித்தேன். ஒரு மரியாதை நிமித்தம். அவர் புன்னகையோடு விஷ் பண்ணாமல் கடந்து சென்றுவிட்டார். நான் முதுகலை படித்த அமெரிக்கன் கல்லூரியில் கூட ஆசிரியர்கள் விஷ் பண்ண வேண்டாமே.. ஹலோ.. ஹாய் சொன்னால் போதுமே என்று தான் பழக்கியிருந்தார்கள். இருந்தாலும் இந்த சமுதாயம் இடையில் நிறைய குப்பைகளை திணிக்கிறதே.. அதனால் பிடிக்காமலே கூட இந்த சமுதாயத்தின் நிர்பந்தத்திற்காக ஒப்புக்காக சில காரியங்களை உயிர்ப்பில்லாம் செய்து கொண்டு தானே இருக்கிறோம்..
படப்பிடிப்பில் ஒரு நாள் ரேவதிக்கு அலர்ஜி ஆகிவிட, மாத்திரை போட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என்று படுத்துவிட்டார். அந்த தருணத்தில் சுரேஷ் மேனன் தான் இயக்கினார். திடீரென என்னை பெயர் சொல்லி அழைத்தார்.. கணேஷ் கதாபாத்திரம் என்ன தேவையில்லாமல் தமிழ் வசனங்களை எல்லாம் ஆங்கிலத்தில் தானே மாற்றிமாற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.. நீங்கள் எத்தனை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. நீங்கள் எழுதியிருப்பதை அப்படியே பேசச் சொல்லுங்கள்.. அது தான் யதார்த்தமாக இருக்கிறதே என்றார்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னோடு ஒரு வார்த்தை கூட இது நாள் வரை பேசியிருக்கவில்லை. ஒரே ஒரு புன்னகை மட்டுந்தான் எங்களது உரையாடலாக இருந்திருந்திருக்கிறதாக நான் நம்பிய்ருக்கிற அந்த நேரத்தில், மௌனமாகவே என்னின் அத்தனையையும் கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார். அவரின் மௌனங்கள் அத்தனை அழகானவை. அத்தனை கண்ணியமானவை.. அத்தனை வசீகரமானவை.. அவர் ஒரு திரைமொழி.. பேசாமல் உணர்த்துகிற மனிதர்.
பின்னாளில் அவர்கள் இருவரும் பிரிந்து விட நேர்ந்தாலும் அவர்களுக்கிடையேயான நட்பு அப்படியே தான் இருந்தது. எழுத்தாளர் ஞானிகூட தன்னுடைய மனனைவியிடமிருந்து மணவிலக்கு பெறுகிற நாளை ஒரு விழாவாக சேர்ந்து கொண்டாடினார். ஒரு உறவு பிரிய வேண்டியதாக இருந்தால் கூட அதற்கான மரியாதையை தருவது அந்த உறவுக்கு தருகிற மரியாதை மட்டுமல்ல.. நாகரீகம்.. அப்படித்தான் பின்னாளில் ரேவதி அபிஷேக்பச்சன், சல்மான்கான், ஷில்பா ஷெட்டியை வைத்து இயக்கிய எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய இந்தி படத்தின் அறிமுக விழா திரையிடலோடு சத்தியம் தியேட்டரில் நடந்தபோது இருவருமாக சேர்ந்து தான் பிரிந்த பிறகும் அந்த விழாவை நடத்தினார்கள். உறவுகளை நாம் மாற்றி வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்றுகிறபோது அதை செயல்படுத்த இத்தனை நாகரீகத்தோடே யத்தனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சிறிதும் சிராய்ப்போ, வலிகளோ இல்லாமல் அப்போதும் அவர்களால் நடந்து கொள்ள முடிகிறதில் அவர்களுக்கான உறவின் கௌரவம் ஸ்தாபதம் கொள்கிறது.
எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நான்காம் ஆசிரமம் சிறுகதையை நண்பர் மூன்றாம் அரங்கு கருணாபிரசாத் நவீன நாடகமாக மேடையேற்றியிருந்தார். அதில் வரும் நாயகியின் கதை அப்படியே பெண் வடிவ ஆட்டோகிராஃப். மூன்றாவதாய் தனது புரபஸரை தன்னைவிட இருபது வயது அதிகமானவரை திருமணம் செய்து கொள்வார். பின்னர் ஒரு கட்டத்தில் அதிலிருந்தும் விடுபட்டு, தனிமை ரசிக்க விரும்புவார்.. ஆனால் அவர் ஒவ்வொரு கட்டத்திலும், யாரையும் காயப்படுத்தாமலே அந்த நகர்வை நகர்த்துவார். அவரின் ஒவ்வொரு கணங்களும் பரவசங்களால் நிரம்பியவை. அர்த்தமுள்ளவை. அந்த முடிவை அவர் புரபஸரிடம் தெரிவிக்கிற தருணங்கள் கூட அத்தனை இயல்பாய் யாரையுமே காயப்படுத்த தெரியாத ஒரு ஆன்மம் எப்படி தன் தேடலை வெளிப்படுத்துமோ அப்படியாகவே இருக்கும்.
டிஎன்ஏ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் எழுத்தாளர் சுஜாவோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. தொலைபேசியில் நேரம் மறந்து அவரோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். ஏற்கனவே பூர்ணம் விஸ்வநாதன் என்னுடைய எழுத்துகளை படித்து, எனக்கு பிடித்த புத்தகங்கள் என்று என்னை பற்றி தினமணிக்கதிரில் கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் கமலிடமும், சுஜாதாவிடம் என்னை பற்றி முன்பே சொல்லியிருக்கிறார். அதை நினைவு படுத்திக்கொண்டு எங்களின் உரையாடல் தொடர்ந்தது. அவரிடம் அவரது கதைகள் பற்றி பல விசயங்கள் சொன்னேன்.. கேட்டேன்… பெற்றேன்.. அப்போது அவர் மீடியா ட்ரீம்ஸில் இருந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு கட்டம் மிகமிக நுட்பமான தருணமாக இருந்தது. கதைப்படி நாயகியாக நடிக்கும் ரேவதி ஒரு சேரிப்பெண். அவருக்கு பிறந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றி ஒரு குழந்தையில்லாத வசதியான தம்பதியருக்கு தந்து விடுகிறது. சமூகசேவகியான தேவதர்சினி ரேவதி தன் குழந்தையை மீட்கிற போராட்டத்தில் சட்ட ரீதியாக துணை நிற்கிறார். இப்படியாக நகரும் அந்த கதை. இதில் அந்த மருத்துவமனை தலைமை நிர்வாகியாக மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருப்பார்.
ஒரு கட்டத்தில் ரேவதியின் ஜாக்கெட்டிஙர மார்பின் மையப்பகுதியில் குழந்தை இல்லாமலே தன்னை மீறிய தாய்மையில் சுரக்கும் பால் நனைத்திருக்கும்.. நிஜவாழ்வில் ரேவதிக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த காட்சியை தவிர்க்கலாமே என்று மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் ரேவதி சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார்.
இந்த இடத்தில் துவக்கத்தில் சொல்வதாய் சொல்லியிருந்த அந்த ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். அது ஒரு அரிதான குணம். அதை ரேவதியிடம் பரிபூரணமாய் தரிசித்திருக்கிறேன். அதை ரேவதியின் தனித்தன்மை என்றும் சொல்லலாம்.
என்னுடைய திரைப்படகலாசாலையில் எனக்கு திரை இலக்கணத்தை தெளிவாக, எளிமையாக கற்றுக்.கொடுத்தவர் தரையில் இறங்கும் விமானங்கள் தொலைக்காட்சி தொடரை இயக்கிய ராஜன் சர்மா. இப்போது இவர் ஈஞ்சம்பாக்கம் திரைப்படக்கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். கிட்டத்தட்ட அப்படியானவொரு எளிமையான இலக்கணத்தையே இயக்குகையில் ரேவதி கையாண்டார். அதனால் நாங்கள் சேர்ந்து இயங்குவது அத்தனை லெகுவாக இருந்தது. மேலும் சொல்லப்போனால் யாரிடமுமே அத்தனை எளிதில் இருக்காத ஒரு சுபாவம் ரேவதியிடம் இருந்தது. யாராவது எடுக்கிற விசயத்தில் ஒரு தவறை சுட்டிக்காட்டினால் மற்ற இயக்குநர்களாக இருந்தால் மிகவும் அவமானகரமான விசயமாக அதை எடுத்துக்கொண்டு எதிர்வினை ஆற்றுவார்கள். ரேவதி அதற்கு நேர்எதிர்.
ஒரு முறை மேஜர் சுந்தர்ராஜனுக்கு இரண்டு பக்கமும் ட்ராலி போட்டு அந்த காட்சியை எடுத்துக்கொண்டிருக்கையில் லுக் மாறிவிட்டது. உடனே நான் அவரிடன் அதை நினைவு படுத்தினேன். உடனே எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்கவும், 180 டிகிரி ஃபார்முலா படி வரை படமாய் போட்டுக் காட்டினேன். உடனே அந்த ஷாட்டை ரீஷுட் பண்ணினார் மாறாத புன்னகையோடு. தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவராக ஒரு நாளும் அவர் நினைத்து பார்த்ததேயில்லை. சினிமா ஒரு டீம்வொர்க் என்பதை நூறு சதவீதம் புரிந்து வைத்திருப்பவர். நல்ல விசயம் எந்த பக்கம் இருந்து வந்தாலும் அதை இன்முகத்தோடு, தட்டிக்கொடுத்து, பரவசத்தோடு வரவேற்கிற அந்த குணத்தை அவரிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறேன்.
படிப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலை துவங்கியது. அவர்கள் தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரை ஒத்திக்கு எடுத்திருந்தார்கள். அதன் மேலே தான் எடிட் சூட் இருந்தது. இரவு பகலென விடியவிடிய எடிட்டிங்கில் ஈடுபட்டிருந்தேன். அத்தனை உற்சாகம். அதில் நான் ஒரு புதிய உத்தியை கையாண்டிருந்தேன். பெரும்பாலான இடங்களில் உரையாடல்களை நேரடியாக காட்டாமல், அந்த உரையாடல்களை எதிரேயிருக்கிற நடிகரின் எக்ஸ்பிரஷன் மீது ஓவர்லேப் செய்கிற விதத்தில் கட் செய்திருந்தேன்.
திடீரென ராத்திரி இரவு ஒரு மணி இருக்கும். தன்னந்தனியாக ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ரேவதி அன்றலர்ந்த ரோஜா போல அப்போது தான் தலைக்கு குளித்து கூந்தலை போனி டெய்ல் போல தூக்கி கிளிப் செய்து கொண்டு ஜம்மென உற்சாக புன்னகையோடு உள்ளே நுழைகிறார். உடனே அதுவரை எடிட் செய்திருந்ததை பார்க்கலாமா என்றவர், உன்னிப்போடு பார்க்கிறார். பார்த்து முடித்துவிட்டு எடிட்டரை பார்த்து யார் இப்படி எடிட் பண்ணியது என்று கேட்க, எடிட்டருக்கு சற்றே குழப்பம்.. நான் இல்ல மேடம்.. குலசேகர் சார் தான் இப்படி பண்ணச் சொன்னார் என்றார்.. உடனே ரேவதி திரையிலிருந்து விழி நகர்த்தாமலே ‘குட்’ என்கிறார். பிறகு சில நொடிகளுக்கு பிறகு என் பக்கம் திரும்பி கேட்கிறார்.
‘குலசேகர் சாப்ட்டீங்களா..’
‘இனிமேல் தான்..’
‘இன்னும் சாப்பிடலையா.. எழுந்திருங்க..’
‘இந்த ஒரு சீனை முடிச்சிட்டு, சாப்பிட்டுக்கறேன்..’
‘அதெல்லாம் முடியாது.. முதல்ல போய் சாப்பிடுங்க.. அதுவரை நான் பாத்திட்டிருக்கேன்..’ என்றவர் தலையை செல்லமாய் என் முதுகில் முட்டுக்கொடுத்து டைனிங் அறை நோக்கி தள்ளிக்கொண்டு போய்விட்டு வந்தார். அந்த சுறுசுறுப்பு, அந்த எளிமை, அந்த கரிசனம் மறக்கக்கூடியவையா..
டப்பிங் வேலை நடந்து கொண்டிருந்தது. உதவியாளர்கள் அதற்கென இருந்தார்கள். ஆகவே நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் அதிகாலையில் ரேவதியிடமிருந்து அவசரஅவசரமாய் ஒரு ஃபோன் கால்.
‘உடனே வர முடியுமா?’
‘என்னாச்சி?’
‘அசிஸ்டெண்ட்ஸ் மேஜர் சுந்தர்ராஜனை வச்சி பண்ணின டப்பிங் போர்ஷன் எல்லாமே நான் சிங்க்ல இருக்கறதா சொல்லி, விஜய் டிவி திருப்பி அனுப்பிட்டாங்க.. இவங்களால மேஜர்கிட்ட வேலை வாங்க முடியல.. நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா..’
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே இருந்தேன்.
இந்த வித்தை எனக்கு நன்றாகவே வரும்.
இப்படித்தான் வஸந்த் சார் படப்பிடிப்பு தளத்தில் இந்த இடத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் பயன்படுத்தினால் செயற்கையாக இருக்கும். இங்கேயே உண்மையாகவே ஒரு யதார்த்தமான, ரிச்சான, நாகரீகமான அழகான பெண் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பார். உடனே நான் அங்கே படப்பிடிப்பு பார்க்க வந்தவர்களில் இருந்தோ, அக்கம்பக்கத்தில் இருந்தோ, களையாக இருக்கிற பெண்ணை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் போய் பாந்தமாக ஆங்கிலத்தில் பேசி சம்மதிக்க வைத்து நடிக்க வைப்பேன்.. வைத்திருக்கிறேன்.. நடித்துத் தந்தவர்களை முறையாக நடத்தி, கௌரவத்தோடு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்களும் இந்த அனுபவம் மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
அதனால் மேஜர் சாரை எப்படி கையாளலாம் என்று இங்கிருந்து பைக்கில் பறக்கும்போதே திட்டமிட்டுவிட்டேன். போனதும் கலகலப்பாக அவரோடு பேசி, அவரை காயப்படுத்தாமல் அவர் பகுதிகளை இரண்டு மணி நேரத்தில் முழுமையாக, திருப்தியாக எடுத்துவிட்டேன். விஜய் டிவியும் திருப்தி. ரேவதியும் திருப்தி.. நானம் ஹேப்பி.. மேஜரும் செம திருப்தி.. போவதற்குள் ஒரு குழந்தையாக மாறி எந்த ஆட்டிட்யூடும் காட்டாமல் ஆட்டோ என்றால் கூட பரவாயில்லை என்று சொல்கிற இடத்திற்கு இளக்கமாகிவிட்டார். நான் விடாப்பிடியாக காரில் தான் போக வேண்டும் என்று காருக்கு சொன்னேன். காத்திருந்த நேரத்தில் அவரின் திரைப்பட படப்பிடிப்பு அனுபவங்கள் அத்தனையையும் என்னோடு ஆதர்ஸத்தோடு பகிர்ந்து கொண்டார்.
மாதம் 1-ந்தேதி ஆகிவிட்டால் டான் என்று சம்பளம் தந்து விடுவது ரேவதியின் கெட்ட பழக்கம். இப்படித்தான் நான் ஒன்னாந்தேதி போய் பேமெண்ட் பெற்றுக்கொள்ள வேலை நிமித்தம் மறந்துவிட்டேன். உடனே அவர் மிரட்டலாய் ஃபோன் செய்து, சம்பளம் போட்டா வந்து வாங்கிக்க முடியாதோ.. என்ன வேலை செய்யறீங்க அப்படி?? என்று விட்டு சிரித்தார். சம்பளத்தை உடனுக்குடன் வாங்கிக் கொள்ளாதவர்களுக்கு ஃபோன் போட்டு செல்லமாய் கோபித்துக் கொள்கிற ஒரு தயாரிப்பாளராக ரேவதி இருந்ததை நினைக்கிறபோது அந்த மனிதியோடாக செலவிட்ட அந்த இலக்கிய நாட்கள் நினைவுகளில் சிலிர்த்துக் கொள்கின்றன.
அவரின் அநாயாசமான நடிப்பு அவரின் வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்திக்காத வரை சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது. எல்லா கலைஞர்களையும் ஏதோ ஒரு கட்டத்தில் சமூகம் வேட்டையாடி விடுவதை போலவே, அவரும் பின்னாட்களில் சோக நடிககையாக மாற்றப்பட்டுத் தான் விட்டார் என்றாலும், அவரின் துள்ளலான முந்தைய காலக்கட்ட நடிப்புகளில் அவர் எந்நாளும் நித்யஜீவிதம் கொண்டிருப்பார் தான்.
குலசேகர்