வியாழன், 25 ஜூன், 2020

பாடல் சொல்லும் பாடம் - பாலகணேசனின் பார்வை


"ராஜராஜ சோழன் நான்..
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்.."ங்கிற வரியை கேட்குறப்ப எல்லாம் திரும்ப திரும்ப யோசிக்கிறேன். இதை என்ன மனநிலையில, என்ன அர்த்தத்துல கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பாருனு புரியல. அதாவது நான் ஒரு காதல் தேசம்.. என்னை ஆளும் ராஜராஜ சோழன் நீ"-ன்னுதான அது இருந்திருக்கணும்? ராஜா நாட்டை ஆளுறதுதானே முறை? அதான உருவகம்? அப்புறம் எப்படி ஒரு காதல் தேசம், ஒரு அரசனை ஆளும்? இதென்னடா லூசுத்தனமா இருக்கு அப்படின்னு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துட்டே யோசிச்சிட்டிருக்குறப்பதான் பல எண்ணங்கள் உள்ளாடுது.

எல்லா காதல்லயும் ஆண்களோட ஆளுமையும், டாமினேஷனும் இருக்கும். அதை மனசார ஏத்துக்குற பெண்களும் உண்டு. பெண்கள் தங்கள் மனசுக்குள்ள இவன் என்னோடவன்னு கற்பனை பண்ண, ஆணோ அதை தம்பட்டம் அடிப்பான். "அவ என்னை ஆளுறா மச்சான்"ன்னு ஒருத்தன் பிரஸ்தாபிப்பான்-ல. அதை கவிஞர் இப்படி சொல்லி இருக்காரு  போல. என்னதான் நான் ராஜராஜ சோழனாவே இருந்தாலும் கூட நான் என் தேசமாகிய உன்னை ஆட்சி செய்யல. நீதாண்டி என்னைய வச்சி செஞ்சிட்டிருக்கன்னு. ஒரு பாடல் திறந்துவிடும் புதுக்கதவுகள் கணக்கிலடங்காதது. இந்தப்பாடல் அப்படி ஒரு மேஜிக் பண்ணியிருக்கு.

"மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே..
உல்லாச பூமி இங்கு உண்டானதே.." -ன்னு பெண்ணை சொர்க்கத்தோட ஒப்பிடும் ஆண் அவன். சொர்க்கம் மேல் லோகத்துல இருக்குன்னு சொன்னாலும் கூட, பெண்ணின் இருப்பு பூமியில இருக்குறதால பூமியும் உல்லாசமா ஆயிருதுல்ல? ஆக மண்ணிலும் சொர்க்கம்.. விண்ணிலும் சொர்க்கம். கணக்கு சரியாயிருச்சி.

"கண்ணோடு கண்கள் ஏதும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே " - கற்பூர தீப உதாரணம் பத்தி பேசணும். மற்ற எல்லா விளக்குகளையும் விட கற்பூரம் கொளுத்துறப்போ வர்ற  ஒளியை நான் ரொம்ப ரசிப்பேன். என் கைகளால் நான் ஏற்றிய தீபம். அது எறிஞ்சி முடிக்கிறதுக்குள்ள ஒரு தாண்டவம்  ஆடிரும். காற்றின் திசையை மாற்ற நினைக்காம, அந்த திசையோடே பயணித்து, ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்துட்டு மறையும். வாசமும் தரும். அந்த வாசனை அது மறைஞ்சு போனபின்னும் கொஞ்சம் இருக்கும். கற்பூர தீபம்ன்னு சொல்றது எவ்ளோ பொருத்தம்!

"உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்.." - என்னதான் ஆயிரம் நெருக்கம் வந்தபின்னாலும் கூட ஒரு சின்ன நாடகத்தன்மை இருந்துட்டே இருக்கும் நம்மகிட்ட. அது அழகாவும் இருக்கும். அதுவும் பூமிங்கிற உல்லாச மேடையில நடக்குற இந்த ஓரங்க நாடகம் எப்பவுமே சுகமானது. ஏன்னா அவ இன்பங்களை பாடமாக்கி கத்து தரும் என் தாயகம். அவளை ரசிக்கிறதுங்கிறது அவளை மட்டுமே ரசிக்கிறது இல்ல. அவ நிறைஞ்சி நிக்கிற இந்த பூமியையே ரசிக்கிற மாதிரி. அதுல இருக்குற ஒவ்வொரு பொருளையும் நேசிக்கிற மாதிரி.

"இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசைத்தீயில் நான் வேகிறேன்..
உன் ராக மோகனம்
என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி... -  இது ஒரு சிரமமான பருவம் மற்றும் காரியம். என்னதான் இருந்தாலும் அலைபாயும் மனசு. காதல்ல அதை கட்டுப்படுத்தவே முடியாது. எனக்கனவா இவன்னு முடிவான பிறகும் கூட சில தயக்கங்கள் இருக்கும். ஊஞ்சல் ஆடுற மாதிரி. அதேநேரத்துல அந்த ஊஞ்சல் ஆடுற சமயத்துலயும் உள்ள இருந்து குதிச்சி எப்படா நோக்கத்தை வெளிப்படுத்தலாம்னு ஒரு தீ கனன்று எரிஞ்சிட்டே இருக்கும். அதுக்கும் காதலே காரணம். ஏன்னா அவன் பயணிக்கிற வாகனமே அவளோட குரல் வழியா வழியிற அந்த ராக மோகனம்தான். எப்பவுமே கூடவே இருக்குற அவ குரலேதான் இந்த ஊஞ்சலாட வைக்கிறதையும் பண்ணுது... ஆசைத்தீயில வேகவும் வைக்குது. ஏன்னா அவ அவனோட செந்தாமரை.. செந்தேன் மழை.. அவனோட ஆவியா இருக்கும் தேவி.

"கள்ளூர  பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே..
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே.." - அப்படினு சொல்றப்பவே அவன் ஏன் அவமேல இவ்ளோ பைத்தியமா இருக்கான்னு புரிஞ்சிக்கலாம்.  இதுலயும் ஒரு பெரிய கேள்வி இருக்கு எனக்கு. அது கல்லூற-வா இல்ல கள்ளூற -வா? ரெண்டுமே இங்கே பொருத்தமா இருக்கு. கல்லையே ஊற வைத்து அதை கரைக்கும் பார்வைன்னு வச்சிக்கலாம். இல்லைன்னா பனைமரத்துல இருந்து சுடச்சுட இறக்குன ஊற வச்ச கள் தர்ற போதை போன்றது அவளது பார்வைன்னு வச்சிக்கலாம். எப்படி பார்த்தாலும் நம்ம பிசினஸ் சக்சஸ்தான்.  அதுமட்டுமா அதே கண்கள் சில சமயம் வில்லுல பூட்டுன அம்பா என்னை குறிபார்த்து கொல்லுதாம். ஆகமொத்தம் அவள் கண்களால் மரணம். காதல் மரணம்.

"முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே..
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே.." -ன்னு சும்மா பாடிட்டு போயிர்ராரு கவிஞர். என் நிலைமை தர்மசங்கடமா இருக்கே. செல்வாக்கிலே-ங்கிற வரியை எப்படி மொழிபெயர்த்தாலும் அது அளவே இல்லாம நீளுது. ஆமா... அவள் செல்வாக்கு மிகுந்த தனங்களை உடையவள். அதை வெளியில் இருந்து பார்க்கும்போதும் கூட அந்த கண்கள் ரெண்டு மட்டும் ஒரு பல்லாக்கு பயணமே போகுது. மீள முடியாத சிறை அவள் முந்தானை. அதைவைத்து அவள் மூடியது எதுவானாலும் சரி.. அவன் அங்கேயே இருக்க சம்மதம்ன்னு சொல்றான்.

"தேனோடை ஓரமே நீராடும் நேரமே..
புல்லாங்குழல் தள்ளாடும்
பொன்மேனி கேளாய் ராணி.." -அபப்டினு முடிக்கிறார் பாட்டை. தேன் சிந்தும் அவ்வோடையில் நீராடும் பொழுதுகளில் தள்ளாடுதடி என் புல்லாங்குழல்-ன்னு எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதைதான் இது. அப்பட்டமான ஒற்றை அர்த்தம் கொண்டது. இதைவிட அழகா சொல்லிரவும் முடியாது. ஏன்னா காதல் அதை பேரழகாதான் பார்க்கும். அப்படிதான் அது கத்து கொடுத்திருக்கு. தள்ளாடிய புல்லாங்குழல் அந்த நொடிக்கு முன்புவரை கொண்டாடி இருக்கும் தேனோடையை.  அப்ப அந்த தள்ளாடல் தற்காலிகம்தான். பயபப்ட்ட தேவையில்லை. மீண்டும் புல்லாங்குழல் இசைக்கும்.

இதை உருவாக்கி கருவாக்குன பாலுமகேந்திரா-ங்கிற கலைஞனை  பத்தியெல்லாம் நான் என்னத்த புதுசா சொல்ல? இதை பாடுன யேசுதாஸை உச்சி முகரனும். இளையராஜாவை இன்னும் இன்னும் கேட்டு அனுபவிக்கனும். வாழ்க்கை நிறைவுறும்.


பால கணேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக