புதன், 19 ஆகஸ்ட், 2020

பக்குவம் என்றால்....*

 *பக்குவம் என்றால்....*


ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடல் படையினருக்கு பயிற்சி அளிக்கும் பணியில்

ஈடுபட்டு இருந்தன. பனி மூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து செல்லும் அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது. 


ஒரு நாள் இரவு கடும்

பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று

கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின்

கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.


அப்போது தொலை நோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த

கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். "ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அது இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்".


அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?


நகராமல் தான் இருக்கிறது.


உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு, நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. உடனடியாக 20 டிகிரி விலகிப் போகச் சொல்."


அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக

பதில் சிக்னல் வந்தது. "நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது".


எரிச்சலடைந்த கேப்டன் அடுத்த சிக்னல் அனுப்பினார் "நான் 6 கடல் போரில் வெற்றி பெற்ற கேப்டன்

சொல்கிறேன் 20 டிகிரி விலகிப் போங்கள்.


அதற்கும் மறுமொழி உடனடியாக எதிர் தரப்பில் இருந்து வந்தது. "ஐயா நான் கப்பல்படையின்

இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்.


கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி தனக்கு கீழ்படியாமல்

நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. 


கேப்டன் இறுதி எச்சரிக்கை செய்தி அனுப்பினார் "இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள் அல்லது பீரங்கியால் சுடப்படுவீர்கள்".


பதில் உடனடியாக வந்தது. "இது கலங்கரை விளக்கம்"


மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20

டிகிரி மாற்றிக் கொண்டன.


ஒவ்வொருவர் வாழ்க்கைப்

பாதையிலும் இப்படி சில கலங்கரை

விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ

நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில சூழ்நிலைகள் இருக்கத்தான்

செய்கின்றன. மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே

தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள் தனமாகவே இருக்கும்.


இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது

சிலருக்கு கௌரவக் குறைவாக தோன்றுவதுண்டு. 


மேலே குறிப்பிட்ட

நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல "ஈகோ" பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன்

மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.👍👍👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக